ஆசை இல்லாத மனிதன் இல்லை
கர்வம் கொள்ளாத கலைஞன் இல்லை
பாசம் இல்லாத தாய்மை இல்லை
பொய்கள் கூறாத கவிஞன் இல்லை
முகமூடி அணியாத முகங்கள் இல்லை
ரகசியங்கள் இல்லாத உள்ளங்கள் இல்லை
எழுதாத கவிதைக்கு அணிந்துரை இல்லை
எதுகைக்கும் மோனைக்கும் அவசியம் இல்லை
கல்லுக்கும் புல்லுக்கும் குடைகள் இல்லை
வீதியில் வாழ்வோருக்கு வீடுகள் இல்லை
வரிகளுக்கு வருமான வரிகள் இல்லை
வார்க்காத வார்த்தைகள் பேசுவது இல்லை
அழகான பூவுக்கு ஆணவம் இல்லை
ஆனைக்கும் பூனைக்கும் முகவரி இல்லை
போதனைகள் இல்லாத மாதங்கள் இல்லை
போதிமரம் இங்குண்டு புத்தர் தான் இல்லை
வேதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை
விடியாத இரவென்று எதுவும் இல்லை
சோதனைகள் இல்லாத வெற்றிகள் இல்லை
சோம்பேறி சாதனைகள் படைப்பது இல்லை
சேதாரம் இல்லாமல் நகைகள் இல்லை
தேய்மானம் என்பது தமிழுக்கு இல்லை