போகி புகை மண்டலத்தில் - நான்
மூச்சு அடைச்சு போயிருந்தேன்..
மூச்சு மீண்டும் வந்த போது - நான்
யோகி போல் வீற்றிருந்தேன்..
மண்பானை வாங்க சந்தையில் - நான்
மணிக்கணக்கா காத்திருந்தேன் ..
கண்டாங்கி சேலைகாரி கால்காசு குறைக்க
முண்டாசு கட்டி மூணுபானை வாங்கிவந்தேன்..
இஞ்சி கொத்து ,மஞ்சள் கொத்து - இன்று
கடைத்தெருவில் வாங்கவந்தேன் ..
இஞ்சி இடுப்பழகி வஞ்சி சொன்னவிலைக்கேட்டு
அஞ்சி நானும் ஓடிவந்தேன் ..
மாக்கோலம் போட்ட வீடு - இன்று
மங்களமாய் காணக் கண்டேன் ..
கரும்பு கடிக்கும் ஓசை - இப்போ
காதோரம் இசைக்க கண்டேன் ..
ஜல்லிகட்டு நானும் காண - இன்று
துள்ளிக்கிட்டு போயிருந்தேன் ..
நீதிமன்ற ஆணை கேட்டு - மனம்
விம்மிகிட்டு ஓடிவந்தேன் ..
காணும் பொங்கல் அன்று - நான்
காணத்தான் போயிருந்தேன் ..
கன்னியரின் கால் கொலுசில் - நான்
காணாமல் போயிருந்தேன் ..
மஞ்சு விரட்டினிலே .. மாமன் பொண்ணு
மஞ்சு விரட்டினிலே .. நானும் இங்கே
தலை தெறிக்க ஓடி வந்தேன்..
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!