"அவளுக்காக நான்"
கவிதைகள் பல மிஞ்சும் காவியமாய் வந்தவளே,
பெண்ணின் பெருமை சொல்ல இலக்கணமாய் நின்றவளே,
கண்ணிரண்டில் கதைகள் பேசி காதல் ஒன்று தந்தவளே,
புன்னகையால் வசியம் செய்து என் மனதை வென்றவளே.
மறைக்க ஒரு மனமின்றி அன்பில் நெஞ்சம் திண்டாட,
இவள்தானே இனியென்று இதயம் உன்னை கொண்டாட,
கடந்த கால கதையெல்லாம் உன்னிடத்தில் நான் உரைத்தேன்,
உனை உரிமை கொண்டாட என் மனதால் தூதுவிட்டேன்.
கசப்புகள் நிறைந்திருந்த கதைகள் யாவும் கேட்டிருந்தாய்,
இருந்தும் என்னை வெறுக்காமல், எனை ஏற்க காத்திருந்தாய்,
அன்பு செய்யும் தோழியாக எனக்கு உந்தன் தோள் கொடுத்தாய்,
அவையாவும் காற்றில் இன்று, என்று சொல்லி கை கோர்த்தாய்.
உயிரில்லா என் மனதில் உணர்வுகளை சேர்த்தவளே,
நெஞ்சில் இன்பம் நிறைந்திருக்க காரணமாய் பூத்தவளே,
பசுமை நெஞ்சில் படருதடி, காதல் என்னை கரைக்குதடி,
உள்ளம் எல்லாம் உருகிப்போக, கண்கள் நீரில் மூழ்குதடி.
விழியோடு மொழிபேசும் எனை ஆளும் தேவதையே,
மனதோடு இதம் தேக்கும் எந்தன் உயிர் காதலியே,
உனைத்தேடி தினம் வந்து என் காதல் நான் உரைப்பேன்,
கணநேரம் பிரியாமல் என் அன்பை நான் இறைப்பேன்.
தாய் போல மடி தந்து, என் தலை கோத வந்தவளே,
நான் கொண்ட பாரமெல்லாம் கரைந்தோட செய்தவளே,
இறுதி நொடி காலம் வரை உனை நானும் காதல் செய்வேன்,
உந்தன் புகழ் நான் பாடி, பெருமிதமும் நான் கொள்வேன்.
-குரு-