சடலமறுக்கும் அவனுக்கு
சலனமென்று எதுவும் வருவதில்லை
பணக்காரச்சடலத்திற்கும்
பிச்சைக்காரச்சடலத்திற்க்குமான
பாகுபாடு பார்த்ததுமில்லை
அவனிடத்தில் கேட்டுத்தான் பாருங்களேன்...
எல்லாச்சடலமும் ஒன்றென
சமத்துவம் போதிப்பான் உங்களுக்கு
அறுத்த சடலத்தை
மூட்டையெனக்கட்டி ஒப்படைக்கும்போதிலெல்லாம்
அழுகிற சப்தம் கேட்டு
பழகிப்போன அவன்
அலட்டிக்கொள்வதில்லை
அதற்காகவெல்லாம்...
பேசித்தான் பாருங்களேன்
சமத்துவம் போதிக்கும் அவனிடத்தில் வீசும்
சாராய வாடையை மறந்துவிட்டு..
நீயுமொரு பிணம்
நானுமொரு பிணம்
நமக்கெதற்கு பணம் என்பான்
ஆசை துறக்கச்சொல்லும்
பிணவறை புத்தனாய்
புரிவான் உங்களுக்கு .....
அடிக்கடி பிணமறுக்கும் அவனுக்கு
நேயமில்லை என்று நினைக்காதீர்கள்
நேயமுள்ளவர்களை சடலமாய்
கண்டபோது
அவனும் அழுததுண்டு..