அது ஒரு அழகான சிறிய கிராமம்.
அன்றைய நாளின் முடிவை நோக்கி நகர சாட்சியாய் இருக்கும் அந்த அந்தி சாயும் மாலை பொழுதில் நண்பன் லோகநாதனோடு பேசி கொண்டே வாக்கிங் சென்று விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் மதிப்பிற்குரிய பெரியவர் விஸ்வனாதன். தன் வீட்டை நெருங்கி விட்டதை உணர்ந்ததும் நடையை நிறுத்தி விட்டு “சரிடா லோகு இன்னைக்கு வாக்கிங் போன நேரமே தெரியல அதுக்குள்ள வீடு வந்துவிட்டோம் பாரு. சரி நாளைக்கு பார்க்கலாம் சரியா….” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.
உள் நுழையும் போது வழக்கம்போல் டீவியின் சீரியல் சத்தம் தான் வரவேற்றது. இருப்பினும் ஒரு தொண்டை கமறுதலோடு நுழைந்து சோபாவில் அமர்ந்தபடியே “ராஜீ…..சூடா ஒரு கப் காபி உன் கைய்யால கொண்டுவா பார்ப்போம்” என்று மனைவியின் முகத்தை பார்த்தார். டீவிதான் ஓடுகின்றது ராஜியின் மனம் எங்கோ இருக்கின்றது என்பதை அப்போதுதான் உணர்ந்தார். மறுபடியும் ராஜியின் தோலை உலுக்கியவாறே “என்னாச்சுமா ராஜி எங்கே இருக்க….” அப்போதுதான் உணர்வு வந்தவளாய்… “அடடே எப்பங்க வந்தீங்க? இருங்க தண்ணீர் கொண்டு வர்றேன்…” என்றவாறே அடுக்கலைக்குள் சென்றாள்.
தண்ணீர் சொம்புடன் வந்தவளை, “ராஜீ நான் உன்னிடம் காபி தான் கேட்டேன். நீ… தண்ணீ கொண்டு வர்ற….. என்னாச்சு உனக்கு? எந்த லோகத்துல இருக்கன்னு புரியலையே…..” என்றான். “அட கடவுளே…. காபி கேட்டீங்களா……? இதோ நிமிஷத்துல கலந்து எடுத்து வர்றேன்” என்று உள்ளே ஓடியவளை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். சுடச் சுட கமகமக்கும் காபியோடு வந்து தந்து விட்டு அவர் அருகிலேயே அமர்ந்தாள்.
இரண்டு வாய் காபியை ஆசையாக உறிஞ்சு விட்டு பின் ராஜியை நோக்கி “சீரியல் ஓடுனா அதுக்குள்ளேயே போய்ட்டா மாதிரி உன் பங்கிற்கும் ஏதாவது கூடவே பேசிகிட்டு சுவாரஸ்யமா பார்த்துட்டு இருப்பியே..…. இன்னைக்கு நீ சீரியல்ல லயிச்சு போய் பார்த்தா மாதிரி எனக்கு தெரியலையே…. வேறு என்ன உனக்கு யோசனை….. என்கிட்ட சொல்லமாட்டியா….?” என்றார். “என் மனசுல உள்ளதை உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்டங்க சொல்லுவேன்? நீங்க வெளியே கிளம்பியதும் நம்ம மரகதம் இல்ல… அதாங்க உங்க நண்பர் லோகுவோட வீட்டுக்கு பக்கத்து வீடு….. அவளோட மகள், மருமகன், பேரன்,பேத்தி எல்லாம் அமெரிக்காவிலிருந்து வந்து இருக்காங்கல்ல….. அவர்களை போய் பார்த்துட்டு வரலாமுன்னு நானும் காமாட்சியும் போனோம். அவங்கள்ளாம் பேசுறதும் புரியல. நம்ம ஊர் விபரம் எதுவும் தெரியல… அந்த குழந்தைங்க வாயில இங்கிலீசுல்ல புகுந்து விளையாடுது…. பாட்டி, தாத்தாவை கூட வேற என்னவோ சொல்லி தான் கூப்பிடுதுங்க…. ஒண்ணும் புரியல போங்க…. மரகதம் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம விழி பிதுங்கி நிற்பதை பார்த்தா பாவமா இருந்தது. அவங்களுக்கு இந்த கிராமம் வசதிபடலையாம். இன்னும் இரண்டு நாளில் சென்னையிலையே போய் ரூம் எடுத்து தங்கி சுத்தி பார்த்துட்டு அப்படியே அமெரிக்கா போய்விடுவாங்களாம். இதெல்லாம் பார்த்துட்டு திரும்பி வரும்போது காமாட்சி சொன்னா….. உன் புள்ளையும் தானே கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைகளோடு அமெரிக்கா போய் இரண்டு வருஷமாச்சு. இவங்கள்ளாம் வந்தாலும் உங்க வீடும் இது போல தானே இருக்கும்னு சொன்னா பாருங்க அப்பதான் என் அடி வயிறு என்னமோ போலாச்சு. ஏங்க நம்ம பேத்திகளை ரெண்டு வயசுல பார்த்தது. அவங்க வந்தாலும் இப்படிதான் பேசுவாங்களா…? இங்க நம்ம கூட ஆசையாக இருக்கமாட்டாங்களா…..? என்று சொல்லும்போதே அவள் குரல் தளர்ந்தது.”
விஸ்வநாதன் ராஜியின் கைய்யை ஆறுதலாய் பிடித்தவாறே “ஏன் ராஜி நம்ம பிள்ளைங்க மேல நாமே நம்பிக்கை இல்லாம பேசலாமா…? அவங்க வீட்டையும், நம்ம வீட்டையும் ஏன் சேர்த்து வச்சி பேசுற….? லோகு கூட இத பத்திதான் பேசிட்டு வந்தான். அவன் கிட்ட சொன்னதைதான் உன் கிட்டேயும் சொல்லிக்கிறேன். நம்ம வளர்ப்பை நாமே சந்தேகபடகூடாதுமா அடிக்கடி நம்ம பிள்ளைங்க நம்ம கூட ஃபோனில் ஆசையா பேசுறாங்க. குழந்தைங்க கூட நம்மை பார்க்க ஆசைபடுறதாதானே பையனும், மருமகளும் சொல்றாங்க…”
“அவங்க நம்மை ஆறுதல்படுத்த சொல்றாங்களோ என்னவோ? அந்த பசங்களோட குரலை நாம கேக்கமுடியலையே விளையாடுற சத்தத்தையும், கூச்சல் போடுறதையும் தான் காதில் கேட்க முடியுது”என்று வருத்தத்தோடு சொன்னாள்.
“அவங்க சொல்றாங்க இவங்க சொன்னாங்கன்னு மனசுல கண்டதையும் போட்டு யோசிக்காதே என்ன? நம்ம வளர்ப்பு சரியா இருந்தா நம்ம பிள்ளைகளும் நிச்சயம் நிலைமாறாமல் வருவாங்க அதனால உன்னை நீயே குழப்பிக்காம போய் வேலைய பாரு ” என்று சொல்லிவிட்டு செய்தியை கேட்க ஆயுத்தமானார்.
“ஹூம் என்னவோ போங்க” என்றவாறே இரவு சாப்பாட்டிற்கான ஆயத்த வேளையில் ஈடு பட ஆரம்பித்தாள். மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க எண்ணி இவள் தான் மருமகளையும், இரட்டை பிள்ளைவரமாக அமைந்த பேத்திகளையும் அமெரிக்கா அனுப்பி வைத்தாள்.ஆனால் அதன் பிறகு ஏனோ அவ்வபோது ஏக்கமும், வெறுமையும் வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. ஒரே மகனாச்சே அவ்வப்போது இப்படிதான் கணவரிடம் ஏதாவது சொல்லி புலம்பி ஆறுதல் தேடிக்கொள்வாள். அவரும் எப்போதும் தவறான எண்ணம் நமக்கு வரக்கூடாது என்றே சொல்லி அவள் புலம்பலை போக்க செய்வார்.
பத்து மாதங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து மகனும், மருமகளும் வழக்கத்தை விட அதிக சந்தோஷத்தோடு தொலைபேசியில் பேசினார்கள். இன்னும் ஒரு மாதத்தில் ஊர் வருவதாக தெரிவித்தார்கள்.
விஸ்வநாதனுக்கும், ராஜலெட்சுமிக்கும் அப்படி ஒரு சந்தோஷம். கண்ணில் பார்ப்பவர்களிடமெல்லாம் தன் பையன் குடும்பம் வர போவதை சொல்லியாகிவிட்டது. அவர்கள் வந்து இருப்பதற்கேற்றவாறு ரூம்கள், ஏசிகள் என ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. பேத்திகளுக்கென பார்த்து பார்த்து பொருட்களை வாங்கி சேர்த்தாகி விட்டது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க மனதின் ஓரத்தில் ஒரு கவலையும், பலவித எண்ணங்களும் ராஜிக்கு இல்லாமல் இல்லை.
இதோ அந்த நாள் நெருங்கி விட்டது. ஆவலோடு எதிர்பார்த்த மகன், மருமகள், பேத்திகள் கண் எதிரில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத நிலையில் இருக்கும் போதே தாத்தா…….. பாட்டி….….. என்று அழைத்த வண்ணம் குழந்தைகள் ஓடி வந்தன சற்றும் எதிர்பாராத சந்தோஷத்தில் வாரி ஆளுக்கொரு பிள்ளையாக அணைத்து கொண்டார்கள். நலம் விசாரிப்புகள் எல்லாம் இனிதே முடிந்து விமான நிலையத்திலிருந்து இரண்டு மணிநேரம் பிரயாணத்திற்கு பின் வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லாம் குளித்து விட்டு சாப்பிட அமர்ந்ததும் பேத்தி “பாட்டி நீங்களும் எங்க கூட உக்காருங்க எங்களுக்கு சாதம் ஊட்டி விடுங்க” என்றதும் ராஜிக்கு சந்தோஷமாக இருந்தது. ஆசையோடு இருவருக்கும் ஊட்டி விட்டாள். கடவுளை வேண்டி கொண்டு அந்த குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததை ஆச்சர்யத்துடனும், பெருமையுடனும் பாட்டியும், தாத்தாவும் பார்த்து ரசித்தனர்.
“அப்பா சொன்னா மாதிரி நீங்க செய்த சாம்பார் ரொம்ப நல்லா இருக்கு பாட்டி நீங்க ஸ்வீட் நல்லா செய்வீங்கன்னு அம்மா சொல்வாங்க நாளைக்கு எனக்கு செய்து தர்றீங்களா…” என்றதும் ராஜிக்கு பெருமையாக இருந்தது. “பரவாயில்லையே இவர்களுக்கு எல்லாம் சொல்வீர்களா..?” என்றார் விஸ்வநாதன். “ஆமாம்மா இவங்களுக்கு இரவு படுக்கும் போது ஏதாவது கதை சொல்லணும். இந்த மாதிரி சின்ன வயதில் நாங்க வளர்ந்தது நம்ம அப்பா, அம்மா பத்தி இப்படியே ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொண்ணா சொல்லுவோம். அது அவங்களுக்கு ரொம்ப ஆவலை ஏற்படுத்திருச்சு உங்க ஃபோட்டோவை பார்த்து கொண்டே ஒவ்வொண்ணா கேட்டு தெரிஞ்சுப்பாங்க” இதை கேட்டு விட்டு விஸ்வநாதன் ராஜியை கண்ணாலே பார்த்து சிரித்தார்.
இரவு கொஞ்ச நேரம் பேசுவதற்குள் எல்லோருக்கும் அசதி வந்து விட அப்படியே நடு ஹாலில் அம்மாவை பாய் போட சொல்லி மகன் படுத்து விட்டான். “ரூமில் போய் எந்த தொந்தரவும் இல்லாம படுப்பா” என்றாள் மகனை பார்த்து ராஜி.
“இந்த இயற்க்கையான காற்றோடு படுத்து எவ்வளவு நாளாச்சும்மா” என்றான்.
குழந்தைகளும் “தாத்தா நாங்க இன்னைக்கு உங்க கூடவும், பாட்டி கூடவும் தான் படுப்போம். எங்களுக்கு கதை சொல்லணும் சரியா” என்றார்கள். அவ்வபோது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிய பேத்திகளின் பேச்சுகளை பெருமிதத்தோடு ரசித்தும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தும் கொண்டிருந்தனர் விச்சுவும், ராஜியும். அப்படியே எல்லோரும் பேசி கொண்டே அதே ஹாலில் அயர்ந்து தூங்கியும் போனார்கள்.
பொழுது விடிந்தது ராஜேஸ்வரியும், மருமகளும் ஊர் கதைகள், அந்த கதை என்று பேசி கொண்டே வேலையில் இருந்தனர்.“ ராஜி ராஜி” என்று கூப்பிட்டவாறே காமாட்சி வருவதை பார்த்ததும் எல்லாருமாக சேர்ந்து நலம் விசாரித்து கொண்டார்கள். அப்போது பேத்திகள் வந்து “பாட்டி உங்கள் ஃபிரண்ட் காமாட்சி பாட்டிதானே இவங்க”என்று கேட்டார்கள். உடனே “அட…என்னை எப்படி உனக்கு தெரியும்டா கண்ணு” என்று காமாட்சி ஆச்சர்யத்துடன் கேட்டாள். “எங்க தாத்தா, பாட்டிக்கு யாரும் கூட இல்லையான்னு அம்மாகிட்ட கேட்டப்போ காமாட்சி பாட்டின்னு ஒரு நல்ல ஃபிரண்டு துணையாக இருப்பதா சொன்னாங்களே அப்ப நான் சொன்னது கரெக்ட்” என்று துள்ளி குதித்து ஏதோ அவர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசி கொண்டு ஓடிய குழந்தைகளை ரசித்துவிட்டு காமட்சியை பார்த்து பெருமிதமாக சிரித்தாள் ராஜலெட்சுமி.
ஆச்சர்யம் நிறைந்த பார்வையோடு ஆனந்தமாய் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் காமாட்சியும்....