மாலை மணி 5, வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வரும் போல் இருந்தது. காக்கைகளும், குருவிகளும் தத்தம் கூட்டிற்கு சென்று கொண்டிருந்தன. இந்த அழகிய காட்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் மீனா. ஆம் மீன் போன்ற நல்ல மிரட்சியான கண்கள் அவளுக்கு. கலையான முகம், எடுப்பான தோற்றம், நேர்த்தியான பின்னல். குறை கூற முடியாத அழகிதான் மீனா. ரசித்து கொண்டிருந்தவளின் ரசனையை அவளின் கைப்பேசி சிணுங்கி கலைத்தது. எடுத்து அதற்கு உயிர் கொடுத்தாள். மறுமுனையில் அவளின் தாய் கற்பகம் தான். அம்மாடி இன்னும் கெளம்பலையா, அவங்க வரதுக்குள்ள வந்துருமா, மழை வேற வர மாதிரி இருக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துரு மா என்று கூறி வைத்தாள்.
அப்பொழுதுதான் அவளுக்கு நினைவிற்கு வந்தது அம்மா இன்று காலை கிளம்பும் பொழுதே தன்னை பெண் பார்க்க வருவதாக கூறியது. அவளுக்கு அங்கிருந்து நகரவே மனம் இல்லை. இருந்தாலும் அழைத்தது அவளின் அன்னையாயிற்றே. அவளுக்கு தன் தாயின் மீது தனி பாசம். இருக்காதா, தன் தந்தையின் மறைவுக்கு பின் தனி ஆளாக தன்னை வளர்த்து ஆளாக்கியவள் அல்லவா அதனாலே அவளின் விருப்பமே தன் விருப்பமாக வாழ்ந்து வந்தாள். தாயின் சொல்படி உடனே வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.
அவள் வெளியில் வரும் பொழுதே சிறு தூரல் பெரு மழையாக மாறி இருந்தது. மழை காற்று சில்லென்று மேனியை வருடியது இதமாக இருந்தது. ஆனால் மழையில் நனைந்தால் அம்மாவின் கோபத்திற்கு ஆளாக கூடும் எனவே தன் கைப்பையில் எப்பொழுதும் இருக்கும் குடையை எடுத்து விரித்து சாலையில் நடந்தால். பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து அவளை அதிக நேரம் காக்க வைக்க வில்லை. பேருந்தில் ஏறினாள், மழை நேரம் என்பதால் பேருந்தினுல் கூட்டம் அதிகம் இல்லை. தனக்கான இருக்கையை தேடி பிடித்து அமர்ந்தாள். பேருந்து முன் நோக்கி நகர்ந்தது, அவளின் மனம் பின்னோக்கி நகர்ந்த்து.
சரியாக, "மூன்று மாதத்திற்கு முன் இதே போல் ஒரு மழை நாளில் தான் அவள் அவனை சந்தித்தாள். கம்பீரமான தோற்றம். பருத்த தோள்பட்டை. வடிவான உதடு. அடர்ந்த புருவங்கள் அவனுக்கு. மீனாவும் அவனையும் தவிர அந்த நிறுத்தத்தில் வேறு யாரும் இல்லை. மீனா எதேச்சையாக அவனை நோக்கினாள். அவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். மீனாவிற்கு பயம் பற்றிக் கொண்டது. அவள் தனக்கு துணையாக யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். அவள் துரதிஷ்டவசம் அங்கு ஒரு ஈ, காக்கை கூட இல்லை. மழையில் எதிரே இருப்பவர்கள் கூட தெளிவாக தெரியவில்லை. அவள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அவனை மீண்டும் நோக்கினாள். அவன் அவளை இன்னும் கூர்மையாக பார்த்து கொண்டிருந்தான்.
மீனாவிற்கு மழையிலும் குப்பென்று வேர்த்தது. தன் கைப்பையில் கைவிட்டு ஏதாவது கிடைக்குமா என்று துளாவினாள். ஒன்றும் சிக்கவில்லை, கையில் இருந்த குடையை மடக்கி அவனை தாக்குவதற்கு ஏதுவாக பிடித்துக் கொண்டால். அவன் தன்னிடம் வம்பு செய்தால் குடையை கொண்டு தாக்கி அவனை காயப்படுத்தி விடுவது என்று தனக்குதானே சொல்லி கொண்டு அவனை நோக்கினாள். அவன் இப்பொழுது மீனாவை நெருங்கி வந்து கொண்டு இருந்தது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. அவள் இதயம் துடிப்பது அவளுக்கே தெளிவாக கேட்டது. தன் பிடியை இருக்கினாள். இதோ அவன் அவளை நெருங்கிவிட்டான். நெருங்கி வந்து excuse me, "ரொம்ப பின்னால போகாதீங்க, பின்னால கொஞ்சம் பாருங்க" என்று கூறி மழையினூடே சென்று மறைந்தான். அவன் கூறி சென்ற திசையை திரும்பி பார்த்தாள். அங்கு ஒரு பெரிய பள்ளம் மழையில் அது மூடிவிட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
ஒ! இதை தன்னிடம் கூறுவதற்காகதான் அவன் தன்னையே பார்த்து கொண்டிருந்திருக்கிறான். இது தெரியாமல் நாம் தான் அவனை தவறாக நினைத்து ச்ச என்ன முட்டாள் தனம் செய்யவிருந்தோம் என்று நன்றி சொல்ல அவனை தேடினாள். ஆனால் அவன் தான் அங்கு இல்லை. "க்ரீச்ச்......... டிரைவர் ப்ரேக் போட்டதும் தான்" தன் சுய நினைவிற்கு வந்தாள் மீனா. நல்ல வேளை தன் நிறுத்தம் இன்னும் வரவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டாள். தன் நிறுத்தம் வந்ததும் இறங்கி தன் வீட்டை நோக்கி நடந்தாள். தன் தாய் தனக்காக வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். வாம்மா, "என்னடா அவங்க வர நேரம் ஆயிடுச்சே, உன்னை இன்னும் காணோமேனு பார்த்துட்டே, இருந்தேன்! நல்ல வேளை நீ வந்துட்ட. "போ போய், புடவைய மாத்தி தயாராகு மா.அவங்க வந்துட்டே இருக்காங்க
என்றாள்.
மீனாவும் தன் தாய் கூறியபடி புடவை மாற்றி தன்னை அழகாக அலங்கரித்து கொண்டாள். வாங்க! வாங்க! என்ற அம்மாவின் உபசரிப்பு குரல் பெரியதாக கேட்டது. அவர்கள் வந்து விட்டார்கள் போலும். "மழையில வர உங்களுக்கு ஒன்னும் சிரமம்" இல்லையே என்று வழக்கமான ஒரு வார்த்தை கேட்டு விட்டு, தன் மகள் மீனாவை அழைத்தாள். அம்மாடி! மீனா வாம்மா, வந்தவங்களுக்கு காபி கொண்டு வந்து குடுமா, என்றுரைத்தாள். மீனா காபி கோப்பையுடன் கூடத்திற்கு வந்தாள். வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு காபி கொடுத்து விட்டு தன் தாயின் பின்னால் சென்று நின்று கொண்டாள்.
மீனா இவர் தான் மாப்பிள்ளை பேரு சுரேஷ், நல்ல பொறுப்பான பதவில இருக்காருமா. நல்லா பார்த்துக்கோ என்றாள் கற்பகம். ஆனால் மீனாவிற்கு தான் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னமா உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா, மாப்பிள்ளை உன்னை முன்னாடியே பார்த்து இருக்காரு மா. பார்த்ததும் பிடிச்சி போய் உன்னை பத்தி விசாரிச்சி தெரிஞ்சிகிட்டு தன்னோட அப்பா அம்மாவை கூட்டு வந்து இருக்கருமா என்று தன் தாய் கூறகூற தனக்குள் ஏதோ தோன்றியவாறே நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவனேதான் அன்று மழை நாளில் பார்த்தவனேதான் இந்த சுரேஷ்! அவளுக்கு நடப்பது என்னவென்று உணரும் முன்னரே இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
"என்னங்க என்னங்க," எழுந்துருங்க.என்ன ஆபிஸ்கு டைம் ஆகலையா, இன்னும் என்ன தூக்கம், என்ன கனவா அதே கனவா, இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம முதல் முதலா பார்த்துகிட்டதையே கனவு கண்டுட்டு இருப்பீங்க என்று எதிரில் நின்று கத்தி கொண்டிருந்தாள் என் காதல் மனைவி மீனா!