Author Topic: Palak vegetable gravy  (Read 990 times)

Offline RemO

Palak vegetable gravy
« on: February 01, 2012, 10:02:58 AM »

பாலக் கீரையானது அதிக புரதச்சத்து நிறைந்தது. இதை தனியாக மசியல் செய்து உட்கொள்ளலாம். காய்கறிகளுடன் சேர்த்து கிரேவியாக செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றிர்க்கு தொட்டுக்கொள்ளலாம். சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், முடக்குவாதம் நோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் தரக் கூடிய சத்தான உணவு இது.

தேவையான பொருட்கள்


பாலக்கீரை - 1/2 கட்டு
கேரட் - 1
பீன்ஸ் - 10
காலிஃப்ளவர் – 150 கிராம்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
மஷ்ரூம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் ( வெந்தையக் கீரைப் பொடி)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஷ்ரூம் முதலியவற்றை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அதில் சீரகம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கவும். பின் பச்சை மிளகாய், தக்காளி போட்டு நன்றாக கிரேவி பதம் வரை வதக்கவும். அதன் பின் காளான், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் முதலியவற்றைப் போட்டுக் கிளறவும். இதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை ஊற்றி கிளறவும். கடைசியாக தேவையான அளவு உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக விடவும். குக்கரைத் திறந்து கசூரி மேத்தியைப் போட்டு நெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். (கசூரி மேத்தி என்பது வெந்தயக் கீரையை காயவைத்து பொடி செய்யப்பட்டது)

இது வாசனையாகவும், சத்தாகவும் இருக்கும். கிரேவிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சத்தான காய்கறி பாலக் கிரேவி தயார். சூடாக சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற கிரேவி இது.