Author Topic: ~ ஸ்ட்ராபெர்ரி கேக் ~  (Read 344 times)

Offline MysteRy

~ ஸ்ட்ராபெர்ரி கேக் ~
« on: July 07, 2016, 03:10:00 PM »
ஸ்ட்ராபெர்ரி கேக்



தேவையானவை:

மைதா – 225 கிராம்
வெண்ணெய் – 225 கிராம்
ஐஸிங் சர்க்கரை – 225 கிராம்
முட்டை – 4
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:

மைக்ரோ வேவ் அவனை 15 நிமிடங்களுக்கு
180 டிகிரியில் பிரீஹீட் செய்யவும். மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் சேர்த்துக் கலந்து சலித்து வைக்கவும். 9 இன்ச் உள்ள பேக்கிங் பேனில் சிறிதளவு வெண்ணெய் தடவி கிரீஸ் செய்யவும். ஒரு பாத்திரத்தில் மீதமிருக்கும் வெண்ணெயையும் ஐஸிங் சர்க்கரையையும் சேர்த்து, மிருதுவாகவும் நுரை வரும்வரையிலும் நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் முட்டைகளை உடைத்துச் சேர்த்து நல்ல கலவையாக வரும்வரை அடிக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கலக்கவும். இனி, மைதா கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கலக்கவும்.

பிறகு வெண்ணெய் தடவிய கிரீஸ் கேக் பேனில் மைதா கலவையை ஊற்றி, கரண்டியால் சமன் செய்யவும். அப்படியே அவனுக்கு மாற்றி மூடி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை 180 டிகிரியில் பேக் செய்யவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அவனை திறந்து டூத்பிக்கை கேக்கின் நடுவே குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வர வேண்டும். அவனை அணைத்து கேக்கை வெளியே எடுத்து ஆறவிடவும்.

இதற்கு ஐஸிங் செய்யும் முறை:

தேவையானவை:
குளிர வைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) – 500 மில்லி
ஸ்ட்ராபெர்ரி பழம் – 10
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

க்ரீமை ஒரு பவுலில் சேர்த்து முட்டை அடிக்கும் கரண்டியால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக அடித்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை கையால் பிசைந்து பொடியாக நறுக்கி ஒரு பவுலில் சர்க்கரையுடன் சேர்த்து, 15 நிமிடங்களுக்கு தனியாக வைத்திருக்கவும். அடித்த க்ரீமில் 200 கிராம் அளவு எடுத்து, ஸ்ட்ராபெர்ரி கலவையில் சேர்க்கவும்.

அலங்கரிக்கும் முறை:

ஆறிய கேக்கின் மீது அடித்து வைத்த ப்ளெயின் க்ரீமை எல்லா புறங்களிலும் படுமாறு நன்கு பரப்பி விடவும். இனி, படத்தில் காட்டியுள்ளது போல கேக்கின் நடுவில் ஸ்ட்ராபெர்ரி-க்ரீம் கலவையை ஊற்றி, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்ட்ரா பெர்ரி வைத்து டெக்கரேட் செய்து பரிமாறவும். கேக்கை சுற்றி டாட்ஸ் போல க்ரீமில் வைக்க வேண்டும் என்றால், கூடுதலாக வைப்பிங் க்ரீம், சர்க்கரை, நசுக்கிய ஸ்ட்ராபெர்ரியை ஒன்றாக நன்கு அடித்து கலந்து பைப்பிங் பேக்கில் கலவையை ஊற்றவும். இதன் பிறகு, கேக்கை சுற்றி மேலே மற்றும் கீழே டாட்ஸ் வைக்கவும்.