Author Topic: எங்கேயும் போய்விடவில்லை அம்மா  (Read 486 times)

Offline thamilan

எங்கேயும் போய்விடவில்லை
அம்மா
 
காலைப்பனியில் காலார நடக்க
பாதணிகளை அணியும் போது
கழுத்தில் கம்பளித் துணியை
சுற்றி விடுகிறாள்

தவளையும் பாம்புமாய்
கபம் தொண்டையில் சண்டையிடுகையில்
மணக்க மணக்க
தழை ரசம் வைத்துத் தருகிறாள்

தூங்கும் போது
கால்அமுக்கி  இதமாக தலைதடவி
தூங்க வைக்கிறாள்

பண்டிகை வந்தால்
பளிங்குக் கிண்ணமாய்
வீட்டை புதுப்பிக்கிறாள்
வாயார வயிறார
பண்டங்களை சமைத்துப் பரிமாறுகிறாள்

மருமகள் மீது
கொள்ளைப் பிரியம்
மடியில் வைக்காத குறையாய்
மனதில் வைத்துத் தாங்குகிறாள்

வெளியூர் சென்று
தாமதமாய் வந்தால்
பலதடவைகள் கதவாக மாறி காத்திருக்கிறாள்

காலையில் காப்பி
மேசைமேல் வைக்கும் ஓசை கேட்டு
அம்மா என்று அழைக்கத் திரும்பினேன்
மனைவி!!

பூச்சரம் எடுத்து
அம்மாவின் படத்துக்கு
மாலையிட்டாள் அவள்

எங்கேயும் போய்விடவில்லை
அம்மா!!