Author Topic: ~ முள்ளங்கி பொரியல் ~  (Read 358 times)

Offline MysteRy

~ முள்ளங்கி பொரியல் ~
« on: April 26, 2016, 10:14:55 PM »
முள்ளங்கி பொரியல்

தேவையானவை:

முள்ளங்கி- 1
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
சாம்பார்பொடி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
காயம்- சிறிதளவு

செய்முறை:
 
1. முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிசம் செய்து விட்டு முள்ளங்கியையும் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
3. பாதி வெந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு வதக்கவும்.
4. அடிப்பிடிக்காமல் எண்ணெய் விட்டுக் கிளறிக் கொண்டே வரவும்.
5. முள்ளங்கி தயாரானதும் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.


 
கூடுதல் குறிப்புகள்:

 
1. முள்ளங்கியைக் குழம்பில் போடுவது மட்டுமில்லாமல் இவ்வகையில் பொரியல் செய்தும் நார்ச்சத்தைப் பெறலாம்.
2. முள்ளங்கியை நறுக்காமல் துருவிக் கொண்டு இதே முறையில் பொரியல் செய்து கொள்ளலாம்.
3. துருவிச் செய்யும் முள்ளங்கி பொரியலில் சாம்பார் பொடி காரத்திற்குச் சேர்ப்பதற்குப் பதில் மிளகாய்வற்றலைத் தாளிக்கும் போது சேர்த்து துருவினதைப் போட்டு வதக்கி பொரியலைப் பரிமாறும் முன் தேங்காய்த்துருவலை இட்டும் செய்யலாம். மிளகாய்வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாயைச் சேர்த்தும் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.

முள்ளங்கியின் சத்துக்கள்:

முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலிற்குத் தேவையான சத்துக்களும் தாதுப்பொருட்களும் இருக்கின்றன. மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
முள்ளங்கிச்சாறுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் சளித்தொந்தரவுகள், மலச்சிக்கல் நீங்கும்.உடலிற்குக் குளிர்ச்சியைத் தரும் இயல்புடைய முள்ளங்கி, சிறு நீர் உபாதைகள் இருப்பவர்களின் பிரச்சினைகளைப் போக்கி இயல்பாக்குகிறது.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம். முள்ளங்கியை அடிக்கடி சேர்த்தால் வயிற்றுப்பொருமல், எரிச்சல் வரும் வாய்ப்பிருப்பதால் அளவாக உண்ணலாம்.