இங்கிருந்து துவங்கி நீளும்
இத்தெருவின் முடிவு
அதோ
அம்முனையிலிருக்கிறது....
நான்
அம்முனையை அடைகையில்
இவ்விடத்தை முடிவென்றே
சொல்லக்கூடும்...
அக்கணம்
அம்முனை
ஆரம்பமென்று குறிப்பிடப்படும்
பிழையென்று நீங்கள்
சொல்லப்போவதில்லை
நெருடலாய் சிந்திக்கிறேன்
நெஞ்சுக்குள்ளொரு அசரீரி
பித்தம் தெளிவிக்கிறது...
எது துவக்கம்
எது முடிவென்பதை
வரையறுப்பது
நானோ நீங்களோ அல்ல..
ஒவ்வொரு ஆரம்பத்திலும்
ஒரு முடிவிருக்கிறது...
ஒவ்வொரு முடிவிலும்
ஒரு ஆரம்பமிருக்கிறது
எவ்விடத்தில் நாமென்பதே
அதை தீர்மானிக்கிறது....
அசரீரி மறைகிறது...
என்ன செய்யப்போகிறாயென்ற
உங்கள் வினவலுக்கு
எது முடிவென்று சொல்வது
இப்போது சிரமமாயிருக்காது எனக்கு .....!