அவசரமாயொரு
மெளனம் தேவைப்படுகிறது
அழுகை மறைக்கவேண்டும்
நான் ..!
நிரப்பப்பட்ட எழுதுகோலினின்று
சொட்டுச்சொட்டாய்
எழுதப்படுகிறது
உன் நினைவுகள்...
சின்னஞ்சிறு பரிசுகளிலெல்லாம்
சிரித்து விரியுமுன்
கண்களின் நினைவாயிருக்கிறேன்...
எதிர்பாரா கணங்களில் என்னை முத்தமிட்டு
எத்தனையோமுறை
சிலிர்க்க வைத்திருக்கிறாய்....
இருள் பரப்பும்
நிலவை மீறி
விரல்பிடித்து நடந்திருக்கிறோம்
நானும் நீயும் ....
சமயங்களில் அழுதிருக்கிறாய்
தோள் சாய்ந்து ...
சமயங்களில் சிணுங்கியிருக்கிறாய்
மார் சாய்ந்து .....
எழுதிய வரையிலும்
ஒற்றைத்தாள் கனக்கிறது....
நீளும் இப்பிரிவின் முடிவில்
மீண்டும் சந்திக்கையில்
உனக்கானவன் நானென்பதை
உறுதி செய்து கொள்வாய்
நீயும் கூட....
திரைகடல் தாண்டியிருக்கிறேன்...
திரவியம்
சேர்த்திருக்கிறேன்....
எதிர்பாரா பரிசுகளோடு
எதிர் நிற்க போகிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்
முகம் மறைக்கப்போகிறாய் நீ...
சில
மணித்துளிகளின்
மரணத்திற்கு பிறகு
மீண்டும் வருவாய்.....
எல்லாம் கிடைக்கும் உனக்கு
எதுவுமே கிடைக்காது எனக்கு ...
அவசரமாய் ஒரு
மெளனம் தேவைப்படுகிறது
அழுகை மறைக்க வேண்டும்
நான்......!