Author Topic: ~ பித்தவெடிப்பு ~  (Read 366 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பித்தவெடிப்பு ~
« on: March 11, 2016, 11:16:56 PM »
பித்தவெடிப்பு



பித்தவெடிப்பு அநேகருக்கும் இருக்கக் கூடிய நோயாகும்.சாதாரணமாக, வெடிப்பு மட்டும் சிலருக்கு இருக்கும்;வலி வேதனையோடு சிலரைப் படுத்தியுமெடுக்கும்.உள்ளங்கால் மட்டுமின்றி உள்ளங்கைகளிலும் வருவதுண்டு.
பித்தவெடிப்பிற்கு பல மருந்துகள் சொல்லப்பட்டிருந்தாலும் எளிய கைவைத்தியத்தின் மூலம் தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்குமே என நான் பலமுறை எண்ணியதுண்டு,அதற்கான தீர்வும் ஒரு நோயர்மூலமே கிடைத்தது.
ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் ஒரு நோயர் தமக்கு சித்தமருத்துவத்தின்மேல் ஈர்ப்பு எவ்வாறு ஏற்பட்டது எனக் கூறும்போது, தன் தாயார் நெடுநாட்களாக கடுமையான பித்தவெடிப்பினால் அவதிப்பட்டதாகவும்,அதற்கு அவர்களூரிலுள்ள பூசாரி மருந்து கொடுத்து மூன்று நாட்களில் சரியானதாகவும் கூறினார்.சரி, நமக்கான தீர்வு இதுதானென முடிவு செய்து முகவரி வாங்கிக் கொண்டு 30 கி.மீ.தொலைவிலுள்ள அப்பூசாரியைப் பார்க்க ஓர் ஓய்வுநாளில் கிளம்பினேன்.’
பித்தவெடிப்பு
காலை 7 மணிக்கெல்லாம் அவர் பூசை செய்யும் கோவிலின் முன் கூட்டமிருந்தது.எல்லோர் காலிலும் பித்தவெடிப்பு;கையில் ஒரு குவளை காய்ச்சின பசும் பால்!
பூசாரி கையில் பாலைக் கொடுக்கின்றனர்;அவர் ஏதோ மந்திரம் போல முணுமுணுத்து விட்டு ,சீடரிடம் பாலைக் கொடுக்கிறார்,அவர் அதை உள்ளே எடுத்துச் சென்று ஐந்துநிமிடம் கழித்து வருகிறார்.வந்திருப்பவரிடம் குவளையைக் கொடுத்து குடிக்கச் சொல்லுகிறார்.அடர் பச்சை நிற பாலாக அவரது வயிற்றுக்குள் செல்கிறது.மூன்று நாட்கள் உப்பு,புளி நீக்கிச் சாப்பிடுமாறும்,மூன்றுநாட்கள் தொடர்ந்து வருமாறும் கூறுகிறார்.
நான் மெதுவாக வந்திருப்பவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது,மூன்றாவது நாள் வந்தவர்களின் நோய் முக்கால்வாசி குணமாகிவிட்டதாகக் கூறினர்.அது மட்டுமின்றி ஏற்கனவே வந்தவர்களுக்கு சரியாகிவிட்டதாகவும் அவர்கள் கூறியதாலேயே தாங்கள் வந்திருப்பதாகவும் கூறினர்.
சில மணிநேரம் கழித்துக் கூட்டம் கலைந்தபிறகு நான் அப்பூசாரியிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அது என்ன மருந்து என்று கூறினால் பலருக்கும் பலனளிக்கும் எனக் கேட்டேன்,அவர் தாடியைத் தடவியபடி என்னை மேலும் கீழும் பார்த்து, அது தேவரகசியம் என்றார்.
அவர் கூறியது “எனக்கும் இஷ்க் இஷ்க் என்றே கேட்கிறது”என்பது போல இருக்கவே இனிமேல் இவராக சொல்லப்போவதில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு மனதில் வேறொரு திட்டத்துடன் கிளம்பினேன்.
அவரை பற்றிக் கூறிய நோயாளியிடம் பூசாரியின் நடவடிக்கை பற்றி விசாரிக்கையில், பூசாரி காலை 4 மணிக்கெல்லாம் ஆற்றங்ககரைக்கு செல்வதாகவும் வரும்போது கை நிறைய மூலிகைகளுடன் வருவதாகவும் கூற, அன்றிரவு நோயாளி வீட்டில் தங்க அனுமதி வாங்கித்,தங்கி காலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து பூசாரிக்கு முன்னதாகவே நானும் அந்நோயர் நண்பரும் ஆத்தங்கரைக்குச் சென்று காத்திருந்தோம்.
பூசாரியும் வந்தார்.வரும்போதே கையில் ஒரு சில மூலிகைககள் வைத்திருந்தார்.(பார்ப்பவர்கள் குழம்புவதற்காக என்பது எனக்கு பின்னால் புலப்பட்டது!) கண்கள் இருட்டிற்குப் பழகி ஓரளவு தெரிய ஆரம்பித்தபிறகு பார்த்தால் குப்பைமேனி,தைவேளை,துளசி,வில்வம்,மருது,ஆடாதோடை என விதவிதமாக வைத்திருந்தார்.நான் அதையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினேன்.
ஊருக்கு வந்ததும் அவற்றை முதல் வேலையாகச் சேகரித்து,பால் விட்டு அரைத்துப் பார்த்தேன்.அங்கே பார்த்த நிறத்தில் பால் மாறவில்லை.இருப்பினும் அதனையே சில நோயருக்கு கொடுத்துப் பார்த்தேன்.ஒரு பலனுமில்லை!சோர்வுற்றேன்;தேவரகசியம் என்று அவர் சொன்னது உண்மைதானோ என்றுகூட ஒருகணம் சிந்தித்தேன்.அப்புறம் ஏழாவது எட்டவது அறிவையெலாம் தட்டி எழுப்பி ஏன் அவர் நம்மைக் குழப்புவதற்காக பல மூலிகைகளைக் வைத்திருந்திருக்கக்கூடாது என ஒரு முடிவிற்கு வந்து அன்று பார்த்த மூலிகைகள் பற்றிய குறிப்புகளைக் குணபாடம்- மூலிகை நூலில் தேட ஆரம்பித்தேன்.அதற்கான விடை அந்நூலிலேயே கிட்டியது.
ஆம் அம்மூலிகை “மருது!”
மூன்றாமாண்டு படிக்கும்போது மருதம்பட்டையில் “அர்ச்சுனின்(Arjunine)” உள்ளது அது இதயத்திற்கு இதமானது என்று மட்டுமே படித்து விட்டு முக்கியமான எளிய குறிப்பைத் தவறவிட்டு விட்டோமே என வருந்தினேன்!
இதோ அந்தக் குறிப்பு:
11 கிராம் மருத மர இலையை 180 மி.லி. பாலில் அரைத்துக் கலக்கி தினமெருவேளை மூன்றுதினம் பத்தியத்துடன் சாப்பிட்டுவர பித்தவெடிப்பு நீங்கும்!
செய்து பார்த்தேன்;பால் அங்கு பார்த்த நிறமானது!மூன்றே நாட்களில் கடுமையான பித்தவெடிப்புகூட நீங்கியது.
குறிப்பு:
பச்சை இலைக்கே பலனுள்ளது.உப்பு.புளி நீக்குதல் அவசியமாகிறது.
மிகவும் எளிய கைவைத்தியமாக இன்றளவும் நோயருக்கு அறிவுறுத்துகிறேன்!
கற்போம்!