Author Topic: ~ யோகா பயிற்சி மூலம் வருமானம்... வரி கட்ட வேண்டுமா? ~  (Read 845 times)

Offline MysteRy

யோகா பயிற்சி மூலம் வருமானம்... வரி கட்ட வேண்டுமா?

கேள்வி - பதில்? நான் தனிப்பட்ட முறையில் யோகா பயிற்சி கொடுக்கிறேன். வருடத்துக்கு ரூ.9 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் வருகிறது. நான் 2016-ல் சேவை வரி கட்ட வேண்டுமா? வரி விலக்கு ஏதாவது கிடைக்குமா?

@ -செல்வகுமார்,

கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜிவிஎன் அண்ட் கோ.

“சேவை வரிச் சட்டம் அறிவிப்பு 33/2012-ன் படி, சேவையை வழங்கும் சிறிய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகாமல் இருந்தால், அரசு வரி விலக்கு அளிக்கிறது. உங்களின் வருமானம் ரூ.9 முதல் ரூ.10 லட்சத்துக்குள்  இருப்பதால், 2015 - 2016-ம் நிதி ஆண்டில் நீங்கள் சேவை வரி கட்ட வேண்டியதில்லை. உங்களின் வருமானம் ரூ.10 லட்சத்தை தாண்டும்போது, நீங்கள் சேவை வரி கட்ட வேண்டும்.’’ 



? எனது டீமேட் கணக்கை எனக்குத் தெரியாமலே வேறு ஒருவருக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் டீமேட் கணக்கு வைத்திருக்கும் புரோக்கிங் நிறுவனத்தினர் தவறு நடந்துவிட்டதாக சொல்கின்றனர். எனது டீமேட் கணக்கை பாதுகாக்கும் வழிகளை சொல்லுங்கள்!

-பாஸ்கரன், சேலம்,

ஏ.ஆர்.வாசுதேவன், மேனேஜர் ,சிடிஎஸ்எல்,தமிழ்நாடு

“ஒருவருடைய டீமேட் கணக்கை அவருக்கு தெரியாமல் வேறு ஒருவருக்காக புரோக்கிங் நிறுவனம் பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவருடைய கணக்கிலிருந்து பங்குகளானது பங்குச் சந்தைக்கோ அல்லது தனிநபருக்கோ மாறும்போது டீமேட் கணக்கு வைத்திருப்பவருடைய செல்போனுக்கு இலவச குறுந்தகவலை டெபாசிட்டரி (Depository)  அனுப்புகிறது. இந்த குறுந்தகவல் உங்களுக்கு வந்திருக்கிறது எனில், அதன் அடிப்படையில் புரோக்கிங் நிறுவனம் மீது நீங்கள் புகார் தரலாம். புரோக்கிங் நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டால், அதன் மீது செபி மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.”

? நான் 50,000 ரூபாயை ஒரு வயதாகும் என் மகளுக்காக ஒருமுறை முதலீடாக (one time investment) 15 முதல் 20 ஆண்டுகளுக்கு  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். நல்ல ஃபண்டுகளை பரிந்துரை செய்ய முடியுமா? 
@ -ஜெயராமன்,

த.சற்குணன், நிதி ஆலோசகர், சென்னை .

“கோட்டக் செலக்ட் போகஸ் ஃபண்ட் - குரோத் அல்லது பிர்லா சன்லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட்- குரோத்தில் நீங்கள் வைத்திருக்கும் தொகையை (ரூ.50,000) ஒருமுறை முதலீடாக முதலீடு செய்யுங்கள். இதற்கு சராசரியாக ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், உங்களுக்கு 15 வருடங்களில் ரூ.5 லட்சமும்  20 வருடங்களில் ரூ.8 லட்சமும் கிடைக்க வாய்ப்புண்டு.”

? நான் ஜீவன் ஆனந்த் 149 பிளானை (20 வருட பாலிசி, ஆண்டு பிரீமியம் ரூ.25,000) 2012-ல் எடுத்தேன். மூன்று ஆண்டுகள் பிரீமியம் கட்டி முடித்திருக்கிறேன்.  என்னால் தொடர்ந்து பிரீமியம் செலுத்த முடியவில்லை. நான் இந்த பாலிசியை சரண்டர் செய்தால், எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

@ -ஆறுமுகபிரேம்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம்

“எண்டோவ்மென்ட் பாலிசியைப் பொறுத்தவரை, முதல் மூன்று வருடங்களில் பாலிசியை சரண்டர் செய்ய முடியாது. மூன்று வருடம் பிரீமியம் கட்டிய நிலையில், நீங்கள் பாலிசியை சரண்டர் செய்தால், உங்களின் முதல் வருட பிரீமியத்தை கழித்துவிட்டு இரண்டாவது, மூன்றாவது வருடம் கட்டிய பிரீமியத்தில் 70 சதவிகிதம் திரும்பக் கிடைக்கும். அப்படியென்றால் உங்களுக்கு சுமார் ரூ.35,000 மட்டுமே கிடைக்கும். இதற்குப் பதிலாக,

இந்த பாலிசியை பெய்ட் அப் பாலிசியாக மாற்றிக்கொண்டால், நீங்கள் தொடர்ந்து பிரீமியம் கட்ட தேவையில்லை. காப்பீட்டின் தொகையைக் குறைத்து முதிர்வுக் காலம் முடிந்தவுடன் முதிர்வு தொகை தரப்படும். இடையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குறைக்கப்பட்ட கவரேஜ் தொகை கிடைக்கும்”.



? என் குடும்பத்தில் நான், என் மனைவி, ஒரு குழந்தை என மூன்று பேர் இருக்கிறோம். மாத வருமானம் ரூ.52,000. நான் எத்தனை சதவிகிதம், எதில் சேமிக்க வேண்டும்?, எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்?

தரணி.

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர், புதுச்சேரி.

‘‘ஃபைனான்ஷியல் பிளானிங் செய்வதற்கு வயது மிக முக்கியம். உங்களின் வயது 30 என்று எடுத்துக்கொள்வோம். மனித வாழ்வின் மதிப்பீடு (HLV)உங்களின் ஆண்டு வருமானத்தைப் போல 15 மடங்குக்கு ஆயுள் காப்பீடு, நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. அதன்படி, ரூ.90 லட்சத்துக்கு கவரேஜ் இருக்கிற மாதிரி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. அதையும் டேர்ம் இன்ஷூரன்ஸாக எடுத்தால்தான், உங்களின் மற்ற இலக்குகளுக்கு நிதி ஒதுக்க முடியும். இதற்கு மாதம் 2,000 ரூபாய் தேவைப்படும்.

குழந்தையின் கல்வி (3 வயது) குழந்தையின் உயர் கல்விக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படும் எனில், மாதம் 7,500 ரூபாயை டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

குழந்தையின் திருமணத் தேவைக்கு (23 வயது)குழந்தையின் திருமணத் தேவைக்கு ரூ.50 லட்சம்  தேவை எனில், மாதம் 3,400 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.

 உங்களின் ஓய்வுக் காலத்துக்கு...

மாதம் 20,000 ரூபாய் தற்போது செலவானால், உங்கள் ஓய்வுக் காலத்தில் மாதம் 1,50,000 ரூபாய் தேவைப்படும். அதற்கு மாதம் 5,000 ரூபாயை டாடா ரிடையர்மென்ட் ஃபண்டில் 28 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வரலாம்.’’