Author Topic: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~  (Read 649 times)

Offline MysteRy

சிறுதானிய ரெசிப்பிக்கள்!

பனிவரகுச் சர்க்கரைப் பொங்கல்
கம்புரவை வெண்பொங்கல்
குதிரைவாலி புதினா சாதம்
தினை தேங்காய் சாதம்
வரகு கூட்டாஞ்சோறு
சாமை பால் பாயசம்
வேர்க்கடலை மசால்வ



‘பொங்கல் ஸ்பெஷலாக சிறுதானியத்தில் செய்யக்கூடிய சில ரெசிப்பிக்கள் மற்றும்’ வேர்கடலை மசால்வடை ரெசிப்பியை நமக்குச் சொல்கிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #1 on: January 11, 2016, 09:44:17 PM »
பனிவரகுச் சர்க்கரைப் பொங்கல்



தேவையானவை:

பனிவரகு - ஒரு கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 வெல்லம் - முக்கால் கப்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த பனிவரகு, பாசிப்பருப்பை மூன்றரை கப் நீர் சேர்த்து குழைய வேகவிடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வேக வைத்த பனிவரகு, பாசிப்பருப்புக் கலவையில் வெல்லம் சேர்த்துக் கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை, வறுத்துத் சேர்க்கவும். கூடவே ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இத்துடன் மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். சர்க்கரைப் பொங்கல் தளர இருந்தால்தான் சுவை.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #2 on: January 11, 2016, 09:48:39 PM »
கம்புரவை வெண்பொங்கல்



தேவையானவை:

கம்புரவை - ஒரு கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 இஞ்சி - சிறிய துண்டு
 மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த கம்புரவை, வறுத்த பாசிப்பருப்பை தேவையான அளவு உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்த கலவையை நன்கு கிளறவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #3 on: January 11, 2016, 09:49:49 PM »
குதிரைவாலி புதினா சாதம்



தேவையானவை:

குதிரைவாலி - ஒரு கப்
 புதினா - அரை கட்டு
 பச்சை மிளகாய் - 3
 இஞ்சி - சிறிய துண்டு
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
(சாறு எடுக்கவும்)
 உப்பு - தேவையான அளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
 வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

ஒரு கப் குதிரைவாலிக்கு, இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுத்து, ஹாட் பேக்கில் போட்டு மூடி வைக்கவும். சுத்தம் செய்த புதினா, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். இத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்ததைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்துள்ள குதிரைவாலி சாதம், சிறிது உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கினால் புதினா சாதம் ரெடி.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #4 on: January 11, 2016, 09:51:09 PM »
தினை தேங்காய் சாதம்



தேவையானவை:

தினை அரிசி - ஒரு கப்
 தேங்காய்த்துருவல் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு
 காய்ந்த மிளகாய் - 3
 நெய் - 2 டேபிள் ஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு - தலா கால் டீஸ்பூன்
 முந்திரிப்பருப்பு - 12
 கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கப் தினை அரிசியை இரண்டரை கப் நீரில் வேகவைத்து வடித்து எடுத்து, ஹாட் பேக்கில் போட்டு மூடி வைக்கவும். வாணலியில் நெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் முந்திரிப்பருப்பு துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும். இதில் வடித்த தினை அரிசி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சுவையான தினை தேங்காய் சாதம் தயார்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #5 on: January 11, 2016, 09:52:56 PM »
வரகு கூட்டாஞ்சோறு



தேவையானவை:

வரகு அரிசி - ஒரு கப்
 துவரம்பருப்பு - அரை கப்
 முருங்கைக்காய் - 1
 வாழைக்காய் - பாதி
 பீன்ஸ், கேரட் நறுக்கிக்கொள்ளவும் - பாதி கப்
 பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 புளிக்கரைசல் - கால் கப் (பெரிய நெல்லிக்காய் அளவு)
 கடுகு, உளுத்தம்பருப்பு
- தலா கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய:

 மிளகாய் வற்றல் - 5
 மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகு - கால் டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வரகு அரிசி, துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். காய்கறிகளைத் தனியே வேகவிடவும். பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும், உப்பு, புளிக்கரைசல், வறுத்துப் பொடித்ததைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்துத் தாளித்து சாதத்தில் சேர்க்கவும். இதில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், வரகு கூட்டாஞ்சோறு தயார்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #6 on: January 11, 2016, 09:54:31 PM »
சாமை பால் பாயசம்



தேவையானவை:

 சாமை அரிசி - 4 டேபிள்ஸ்பூன்
 பால் - அரை லிட்டர்
 மில்க்மெய்ட் - கால் கப்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 துருவிய பாதாம் அல்லது பாதாம் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

குக்கரில் அரை லிட்டர் பாலுடன், சாமை அரிசி சேர்த்து 4 விசில் வரும்வரை வேகவிடவும். குக்கரைத் திறந்து, மில்க்மெய்ட் சேர்த்துக் கலக்கி மீண்டும் சூடாக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

ஏலக்காய்த்தூளுக்கு பதில் வெனிலா எசன்ஸ் அல்லது ரோஸ் வாட்டர்
2 சொட்டுக்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ரெசிப்பிக்கள்! ~
« Reply #7 on: January 11, 2016, 09:55:45 PM »
வேர்க்கடலை மசால் வடை



தேவையானவை:

 வறுத்த வேர்க்கடலை - அரை கப்
 வடித்த சாதம் - கால் கப்
 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
 பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
 இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்
 புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கவும்)
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வறுத்த வேர்க்கடலையை ஒன்றும், பாதியுமாகப் பொடித்துக் கொள்ளவும். வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுழற்று, சுழற்றி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் விழுது, உப்பு, சோம்புத்தூள், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவும். அதிலிருந்து மாவை எடுத்து வடைபோல் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் வேர்க்கடலை மசால் வடை தயார்.