Author Topic: ~ சத்துணவு டிஃபன் டைம்- 33 ரெசிப்பி! ~  (Read 2268 times)

Offline MysteRy

குதிரைவாலி பொங்கல்



தேவையானவை:

குதிரைவாலி அரிசி - ஒரு சின்ன கிளாஸ், பாசிப் பருப்பு - 1/4 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - 1 இன்ச், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, முந்திரி - 5, தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் நெய் ஊற்றி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டுத் தாளிக்கவும். பிறகு, பாசிப்பருப்பு, குதிரைவாலி அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடிவிடவும். நான்கு நிமிடங்களில் இறக்கவும். இறுதியாக முந்திரியை நெய்யில் தாளித்து மேலே தூவவும்.

பலன்கள்:

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. புரதம், ஒமேகா 3 இருப்பதால், காலை உணவாகச் சாப்பிடலாம். கால்சியம் இருப்பதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து உள்ளதால், ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. பெண்களுக்கு ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரியைத் தவிர்க்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு கூட்டு



தேவையானவை:

வேகவைத்த பாசிப் பருப்பு - 1 கப், தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 8, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கொத்து, இஞ்சி - 1 இன்ச், பச்சைமிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, சீரகம், பெருங்காயம்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். கொஞ்சம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கிய பின், வேகவைத்த பருப்பைப் போட்டுக் கிளற வேண்டும். இறக்கும்போது மேலே நெய் ஊற்றிக் கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கலாம். விருப்பப்படுவோர், எலுமிச்சைச் சாறு கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சப்பாத்திக்கு சிறந்த சைடு டிஷ். ஃபோலிக் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள மாவுச்சத்து உடனடி சக்தியைக் கொடுக்கும். மூளை, நரம்பு மண்டலத்துக்கு நல்லது. டைப் 2 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிடலாம்.

Offline MysteRy

கம்பு - தயிர் சாதம்



தேவையானவை:

கம்பு - ஒரு கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிவைத்து, சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் இரண்டு முறை அடிக்க வேண்டும். இதைப் புடைத்து, தோலை நீக்க வேண்டும் (ஒரு தட்டில் பரத்தி, ஊதினால் தோல் நீங்கிவிடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்துக்கு உடைத்துக்கொள்ள வேண்டும். உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்க வேண்டும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்:

இதில் தாதுக்கள் அதிகம்.  சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  கொழுப்பு குறைவு என்பதால், உடல்பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால், பால் அதிகம் சுரக்கும்.

Offline MysteRy

ராகி ரொட்டி



தேவையானவை:

கேழ்வரகு (ராகி) மாவு - 1 கப், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1, உப்பு, கொத்தமல்லி, தண்ணீர், நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

ராகி மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி கலந்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, தோசைக்கல்லில் வட்டமாகத் தட்ட வேண்டும். ஓரங்களில் நல்லெண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு, வேகவைத்து எடுக்க வேண்டும். இதைக் காய்கறி குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்:

பருப்பு வகைகளைவிட, கேழ்வரகில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு அடர்த்தி குறைதல், ரத்தசோகை உள்ளவர்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் ராகி ரொட்டி சாப்பிட்டுவர, உடல்நலம் மேம்படும். ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றில் வைட்டமின்கள் உள்ளன. சருமத்துக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

Offline MysteRy

பிரெட் சாண்ட்விச்



தேவையானவை:

சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 2, வட்டமாக நறுக்கிய குடமிளகாய், வெள்ளரி, தக்காளி, கேரட் - தலா 10 துண்டுகள், சீஸ் - தேவையான அளவு.

செய்முறை:

பிரெட்டில், கிரீன் சட்னி (புதினா, கொத்தமல்லி, புளி, உப்பு சேர்த்து அரைத்தது) தடவி, மேலே நறுக்கிய குடமிளகாய், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வைக்க வேண்டும். அதன் மேல், சீஸ் வைத்து டோஸ்ட் செய்ய வேண்டும்.

பலன்கள்:

 கொழுப்பு, புரதம், கால்சியம் உள்ளன. கொழுப்பு அதிகம் இருப்பதால், தினமும் சாப்பிட வேண்டாம். வாரம் இரு முறை சாப்பிடலாம். உடனடி சக்தி கிடைக்கும். எடை அதிகரிக்கும். மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சத்தான உணவு. ஒல்லியான குழந்தைகள் சாப்பிட்டுவர எடை கூடும்.

Offline MysteRy

ராகி் தட்டுவடை



தேவையானவை:

 ராகி மாவு - 1 கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், வெங்காயம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 4, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

ஒரு கப் ராகி மாவில் 3 டீஸ்பூன் அரிசி மாவைக் கலந்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றைத் தூவி, அளவான நீர் மற்றும் உப்பு கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்:

ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், அனைவரும் சாப்பிடலாம். கேழ்வரகு தோசை, கஞ்சி சாப்பிடாதவர்களும் இந்த வடையைச் சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

ராகி தோசை



தேவையானவை:

ராகி மாவு - 1 கப், தோசை மாவு - 2 கரண்டி, தன்ணீர், உப்பு - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2.

செய்முறை:

ராகி மாவில் தோசை மாவு, தேவையான உப்பு, தாளித்த சீரகம், நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும். சூடான தோசைக்கல்லில் ராகி தோசையை ஊற்றி எடுக்க வேண்டும்.

பலன்கள்:

கேழ்வரகில் புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு மற்றும் பல் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Offline MysteRy

பெசரட் தோசை



தேவையானவை:

பச்சைப் பயறு - 2 கப், இஞ்சி - 1 இன்ச், பச்சைமிளகாய் - 1, உப்பு, சீரகம், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு நாள் இரவு முழுவதும் பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள், நீரை வடிகட்டி, பச்சைப் பயறுடன் இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். தாளித்த சீரகத்தை மாவில் சேர்த்து, தோசையாக வார்க்கலாம். இஞ்சிச் சட்னியுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

பலன்கள்:

மற்ற பயறுகளைவிட பச்சைப் பயறு புரதச்சத்து நிறைந்தது. உடலுக்கு வலுவூட்டும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றன. வளர்  பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

கம்பு தோசை



தேவையானவை:

கம்பு மாவு - 1 கப், தோசை மாவு - 2 கரண்டி, பச்சைமிளகாய் - 1, நறுக்கிய வெங்காயம் - 1, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

கம்பு மாவுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்துக்குக் கலந்து, தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். அதன் மேலே நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி தூவி, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

பலன்கள்:

கால்சியம், புரதம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நல்ல கொழுப்பு நிறைந்த உணவு. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும். மிகச் சுவையான, சத்தான டிபன்.

Offline MysteRy

மேத்தி பரோட்டா



தேவையானவை:

கோதுமை மாவு - 100 கிராம், மேத்தி/வெந்தயக் கீரை, உப்பு, நெய்/எண்ணெய் - தேவையான அளவு, சீரகத் தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

செய்முறை:

வெந்தயக் கீரை இலைகளை, தண்டு நீக்கிச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்க வேண்டும். கோதுமை மாவுடன், கீரை, உப்பு, சீரகத் தூள், மஞ்சள் தூள் கலந்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, பரோட்டா தயாரிக்க வேண்டும். தோசைக்கல்லில் நெய்/எண்ணெய் விட்டு பொன்னிறமாக வார்க்க வேண்டும்.

பலன்கள்:

வெந்தயக் கீரை, வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். செரிமானத்தை எளிதாக்கும். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். கல்லீரல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், பசியின்மைக்குச் சிறந்த மருந்து.

Offline MysteRy

அரிசி மாவு ரொட்டி



தேவையானவை:

அரிசி மாவு - 1 கப், வெங்காயம் -1, பச்சைமிளகாய் - 1, உப்பு, கொத்தமல்லி, தண்ணீர், நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

அரிசி மாவில், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி கலந்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, தோசைக்கல்லில் வட்டமாகத் தட்ட வேண்டும். நல்லெண்ணெயை ஓரங்களில் ஊற்றி, திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுக்க வேண்டும். இதை, சாம்பார், வத்தக் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்:

 எப்போதும் தோசை  சாப்பிட்டு அலுத்தவர்கள் அரிசி மாவு ரொட்டி செய்து சாப்பிடலாம். மாவுச்சத்து நிறைந்துள்ளதால், பசியைப் போக்கும். சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடுகையில் புரதச்சத்துக்கள் கிடைக்கும். சுவை மிகுந்த இரவு உணவு.

Offline MysteRy

சில்லி - அன்னாசி சாலட்



தேவையானவை:

அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், குடமிளகாய் - 1, வெள்ளரிக்காய் - பாதி, உப்பு, மிளகுத் தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு.

செய்முறை:

அன்னாசிப்பழம், வெள்ளரி, குடமிளகாயைச் சதுரமாக நறுக்கிக்கொள்ள வேண்டும். உப்பு, மிளகுத் தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸைத் தூவி, சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு சாப்பிடலாம்.

பலன்கள்:

உடல்பருமன் உள்ளவர்களுக்கு,ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. பொட்டாசியம் நிறைந்து இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். நீர்ச்சத்து, நார்ச்சத்து கிடைப்பதால், மலச்சிக்கல் பிரச்னை குணமாகும். அன்னாசியில் உள்ள வைட்டமின் சி இதயத்தைப் பலப்படுத்தும்.

Offline MysteRy

வைல்டு ரைஸ் சாலட்



தேவையானவை:

வேகவைத்த வைல்டு ரைஸ் (மலேசியன் அரிசி) - 1 கப், வெங்காயம், பெரிய தக்காளி - தலா 1, குடமிளகாய் - பாதி, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு - தேவையான அளவு.

செய்முறை:

வைல்டு அரிசியை வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கி, வதக்கி அகன்ற பாத்திரத்தில் போட வேண்டும். தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்துக் கலக்க வேண்டும். இதில், வேகவைத்த வைல்டு ரைஸைக் கலந்து, உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.

பலன்கள்:

வைல்டு ரைஸில் குளுட்டன், சோடியம் இல்லை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பிரவுன் அரிசியைவிட இரண்டு மடங்கு புரதச்சத்து இதில் அதிகம். நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாவது எளிது. சமச்சீரான உணவைச் சாப்பிட்ட பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, சி, இ நிறைந்தது.

Offline MysteRy

ஃப்ரூட் சாலட்



தேவையானவை:

அன்னாசி, ஆப்பிள், பப்பாளி - தேவையான அளவு, தேன் - 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளிகள், பாதாம் - 10.

செய்முறை:

அன்னாசி, ஆப்பிள், பப்பாளியைச் சதுரமாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதில், தேன் ஊற்றிக் கலக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து, பாதாம் தூவிச் சாப்பிடலாம்.

பலன்கள்:

நார்சத்து, நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கலை விரட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாதாம், தேன் சேர்வதால் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது. இதயம் ஆரோக்கியமாகும். நல்ல கொழுப்பு உடலில் சேரும்.

Offline MysteRy

பூசணி சாலட்



தேவையானவை:

சதுரங்களாக நறுக்கிய வெள்ளைப் பூசணி - 1 கப், நிலக்கடலை - 1 கைப்பிடி, நறுக்கிய பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை:

நிலக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சதுரமாக வெட்டிய வெள்ளைப் பூசணித் துண்டுகளோடு, நிலக்கடலையைப் போட்டுக் கலக்க வேண்டும். அதில் பச்சைமிளகாய், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லியைக் கலந்துச் சாப்பிடலாம்.

பலன்கள்:

வைட்டமின் பி1, பி3, சி நிறைந்துள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். வேர்க்கடலை சேர்வதால், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை, பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் இந்த சாலட்டை சாப்பிடுவது நல்லது.