Author Topic: ~ பண்டிகைக்கு பலகாரங்கள், உணவுகள் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கான ....  (Read 343 times)

Offline MysteRy

பஜ்ஜி, எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன வழி?
சமையல் சந்தேகங்கள்

பண்டிகைக்கு  பலகாரங்கள், உணவுகள் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகள் இங்கே...

பலகாரங்களுக்குச் சேர்க்கும் ஃபுட் கலரின் அளவு பாகில் சற்று அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?

பெரிய பிரெட் துண்டுகளை அதில் முக்கி எடுத்தால், அதிகப்படியான கலரை பிரெட் துண்டுகள் உறிஞ்சிவிடும். சரியான கலரில் பாகு இருக்கும்.

பொரியல் செய்யும்போது அவசரத்தில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?

பொரியலை இறக்குவதற்கு முன்பு, வீட்டில் கைவசம் இருக்கும் பருப்புப் பொடியைத் தூவினால் உதிரி உதிரியான பொரியல் ரெடியாகிவிடும். பருப்புப்பொடியில் இருக்கும் உடைத்தக்கடலை அதிகப்படியான நீரை உறிஞ்சிவிடும்.

பராத்தா மெல்லியதாக வர என்ன செய்ய வேண்டும்?

கோதுமை மாவுடன் சிறிதளவு மைதா மாவு சேர்த்துப் பிசைந்து பராத்தா செய்தால், மெல்லியதாக வரும்.

மைசூர்பாகு தயாரிக்கத் தேவையான பொருட்களின் சரியான அளவுகள் என்ன?

கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - 3 கப், நெய் - 3 கப் இவற்றை எடுத்துக் கொண்டால் மிருதுவான மைசூர்பாகு ரெடி.

பண்டிகைக்கு  பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய், நமது உடலில் தெறிக்காமல், இருக்க என்ன செய்ய வேண்டும்... தப்பித் தவறித் தெறித்துவிட்டால் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது?

பண்டிகைக்கு  பலகாரம் செய்யும்போது அடுப்பை மேடைமீது வைத்து நின்று கொண்டு மட்டுமே பலகாரம் செய்யவேண்டும். இதனால், உடம்பில் எண்ணெய் தெறிக்க வாய்ப்பில்லை. கனமான கைத்தறிப் புடவைகளையே கட்டிக் கொண்டு பலகாரம் செய்ய வேண்டும். இனிப்பு, கார பலகாரங்கள் செய்யும்போது நீளமான கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால், அதன்மீது தேனைத் தடவினால் எரிச்சல் குறையும். தீப்புண்களின் மேலே மெல்லிய வாழை இலையையும் கட்டு மாதிரி போடலாம். வாழைமட்டைச் சாறை அந்த இடங்களில் தடவலாம். எந்தக் காரணம் கொண்டும் அந்தக் கொப்புளங்களை உடைக்கக்கூடாது. தண்ணீர் விட்டுக் கழுவலாம்.

கடலை மாவில் செய்யும் லட்டுக்கான பூந்தியின் சரியான பதம் என்ன? இதனை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும?

லட்டுக்காகச் செய்யும் பூந்தி மொறு மொறுப்பாக வேகக்கூடாது. முக்கால் பதம் வெந்ததுமே பாகில் போட்டு விட வேண்டும். லட்டு நீண்டநாட்கள் கெடாமல் இருக்க விரும்பினால், அதில் டைமண்ட் கல்கண்டு சேர்க்க வேண்டாம். அப்படிச் சேர்த்தால், அது காற்றில் கரைந்து லட்டு பிசுபிசுப்புத் தன்மையோடு இருக்கும்.

பண்டிகையன்று சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணமாக, என்ன வகையான  ரசம் வைக்கலாம்?

பெரிய தக்காளி 2, கொத்தமல்லித்தழை கைப்பிடி அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் மிளகாய் வற்றல் 2, இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து 2 டம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். அது கொதிக்கும் அதே நேரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, நசுக்கிய 4 பூண்டுபற்கள், பெருங்காயம் ஒரு சிட்டிகை ஆகியவற்றை வதக்கி, ரசத்தில் சேர்த்து இறக்கவும். இதை சாதத்துக்கும் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம். வாய்க்கும், வயிற்றுக்கும் இதமாக இருக்கும்.

பண்டிகையன்று நாம் குடிப்பதற்கும், வீட்டுக்கு வருபவர்களை வரவேற்று கொடுப்பதற்கும் ஒரு ஆரோக்யமான பானம் ஒன்று கூறுங்களேன்?

மிளகு, சீரகம், மல்லி (தனியா) இவை மூன்றும் தலா 3 டேபிள்ஸ்பூன் எடுத்து, வெறும் வாணலியில் லேசாக வறுத்து, 3 டம்ளர் நீர்விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். கொதிக்கும்போதே ஒரு துண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு அதுவும் சேர்ந்து கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து குடிக்கக் கொடுக்கலாம். இதை பலகாரத்துக்கு பிறகு குடிக்கக் கொடுக்கலாம். (காபி, டீ, ஜூஸுக்கு பதில்) ஜீரணத்துக்கு ஏற்றது. வாயுத் தொல்லையைத் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.

பஜ்ஜி, அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கும்போது பொட்டுக்கடலை மாவு 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து மாவை திட்டமாகக் கரைக்கவும். வாழைக்காயை இந்தக் கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், பஜ்ஜி அதிகமாக எண்ணெய் குடிக்காது.

பண்டிகைக்குச் செய்ய ஸ்பெஷல் இட்லி வேண்டுமே!

மினி இட்லி 25, கெட்டித் தயிர் - 2 கப்
அரைத்துக்கொள்ள:
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
பச்சைமிளகாய் - 2
முந்திரிப்பருப்பு - 5
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிட்டிகை
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க:
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்தவற்றை நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். வாயகன்ற ஒரு பேஸினில் தயிரைக் கொட்டி அரைத்தவற்றைச் சேர்த்துக் கலக்கவும். மினி இட்லிகளை இதில் சேர்த்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து  சேர்த்து, அலங்கரிக்கக் கொடுத்தவற்றினால் அலங்கரிக்கவும். இதுவே ஸ்பெஷல் மினி தயிர் இட்லி. இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.

குறிப்பு:

சாதாரணமாக இட்லி செய்தால் சட்னி, சாம்பார் தொட்டுச் சாப்பிடுவோம். பண்டிகையன்று மற்ற பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதால், இந்த மினி இட்லியைச் சாப்பிடுவது ஜீரணத்துக்கும் நல்லது. ஒரு முழு காலை உணவு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

பர்பி, மைசூர்பாகு, மற்ற கேக்குகள் செய்ததும் துண்டு போடும்போது விழும் துகள்களை என்ன செய்வது? சிறியதாக ஓரங்களில் மிகச்சிறிய துண்டுகளும் விழுகின்றவே? அவற்றை எல்லாம் என்ன செய்வது?

இந்தத் துகள்கள், துண்டுகளைப் பொடித்து எல்லாவற்றையும் சேர்த்து சோமாஸி செய்யும்போது பூரணமாக இதை உள்ளே வைத்து சோமாஸ் செய்தால், புதுச்சுவையுடன் சோமாஸ் தயார்.

பண்டிகையன்று நாம் என்னதான் பலகாரங்கள் செய்திருந்தாலும் குழந்தைகள் விரும்பும் எளிமையான ஹோம் மேட் ஐஸ்கிரீம் சொல்லமுடியுமா?

ஒரு லிட்டர் பாலுக்கு அரை கப் பால்பவுடர், 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார், கால் கப் சர்க்கரை சேர்த்து, கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து முக்கால் பாகமாக வற்றவிடவும். வெனிலா எசன்ஸ் சிறிதளவு (அ) ஒரு டீஸ்பூன் கோகோ பவுடர் போட்டுக் கலக்கவும். ஆறியதும் கப்புகளில் ஊற்றி, ஃபிரீஸரில் 2 மணிநேரம் வைத்து எடுத்தால், சூப்பர் ஹோம் மேட் ஐஸ்க்ரீம் ரெடி.

பனீரை வீட்டிலேயே தயாரித்து குருமா, சூப், மசாலா இவற்றில் சேர்க்கும்போது உடைந்துவிடுகிறதே? உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பாலைத் திரிக்கும் போது வினிகர், எலுமிச்சைச் சாறு எது சேர்த்தாலும் கண்டிப்பாக தயிரையும் சேர்த்துத் திரித்தால் பனீர் கெட்டியாக இருக்கும்.

எந்தெந்த பாயசங்களுக்கு எந்தெந்தப் பால் சேர்க்க வேண்டும்?

வெல்லம் சேர்த்துச் செய்யும் அரிசி, பயத்தம் பருப்பு பாயசங்களுக்கு தேங்காய்ப்பாலையும், சேமியா, ஜவ்வரிசி போன்ற பாயசங்களுக்கு காய்ச்சிய பசும்பாலையும் சேர்க்கலாம். கேரட், பூசணி, சுரைக்காய் போன்றவற்றை வைத்துச் செய்யும்  கீர்களுக்கு மில்க் மெய்ட் சேர்க்க சுவையும் மணமும் கூடும்.