Author Topic: ~ சகோதர சகோதரிகளுக்கிடையேயான பந்தத்தை பலப்படுத்தும் ரக்ஷா பந்தன் ~  (Read 675 times)

Offline MysteRy

சகோதர சகோதரிகளுக்கிடையேயான பந்தத்தை பலப்படுத்தும் ரக்ஷா பந்தன்



இது ஒன்றுதான் எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கிறது. மனித உறவுகளை பலப்படுத்துகிறது.

சகோதர சகோதரிகளுக்கிடையேயான பந்தத்தை பலப்படுத்தும் பண்டிகையாக ரக்ஷாபந்தன் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு மாதம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் இந்த விழா இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். மேலும், அவர்கள் சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் இனிய திருநாள் இது.

பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில் உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை வெளிப்படுத்தும் நோக்கமாக கொண்டாடப்படுகிறது.

சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ என்று குறிக்கும் விதமாக அவர்களுக்கு பல பெண்கள் ராக்கி கயிறு கட்டி பாசத்தை சொல்லாமல் சொல்கிறார்கள்.

ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் முக்கியமாக வடஇந்தியாவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த பண்டிகை தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை மகாபாரத்தில் பாண்டவர்களின் மனைவியான திரெளபதி, போர்க் களத்தில் பகவான் கிருஷ்ணனின் கையில் ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இதனால் கிருஷ்ண பரமாத்மா திரெளபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டு உறுதி பூண்டார். எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கவுரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால் அவமானப்படுத்தப்பட்ட திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றினார்.

சகோதர உறவுகள் வளர்ந்தால் சர்ச்சைகளுக்கு இடமேது? உலகிலேயே உயர்வான சகோதர உறவை வெளிப்படுத்தும் இத்திருநாள் குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அடிப்படை பாடத்தை நமக்கு போதிக்கிறது.