Author Topic: ~ குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள் ~  (Read 497 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்



குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது.

வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது.

ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும். இதன்மூலம் இழந்த நீர் சத்தை குழந்தைகளால் பெற முடியும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும்.

உப்புக் கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம். ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப்போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பார்கள். இதனை தடுக்கக் கூடாது.

இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல் தட்டுதல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.