நான் உன் பின்னால் இருக்கிறேன் 
என்னை பத்திரமாக வாழ்க்கைப்பாதையில்
இட்டுச்செல் என நீயும் ,பின்  தொடர்ந்து 
நீ வருகிறாயென அறிந்து வழி நடத்த அன்புடன் நானும் 
காலமெல்லாம் கைவிடமாட்டேன் என்று
உறுதி பூண்ட தினம் நம் மணநாள் அன்று 
அம்மி மிதித்து ,அருந்ததி பார்த்து மணவறையை 
மும்முறை நாம் வலம் வந்த கணத்தில் வெட்கமும் 
,பயமுமாய் இமைகள்  படபடக்க என் கைகளை 
இறுக்கமாய் பிடித்திட்ட உன் கரங்கள் 
சொல்லாமல் சொல்லிற்று என் மேலான உன் நம்பிக்கையை ..
 
நினைக்கவில்லை இப்படி ஓர் இன்னலை கனவிலும்
கண்டறியா சோதனை வேதனையை தந்துவிடுமென்று ..
உலகமரியா பேதையாய் இருந்தவள் நீ .
இல்லமே பெரிதென்று என்னுலகம் நீங்களே என்றாய் ..
நம்பியவளின் நம்பிக்கையை சிதறடித அந்த நாள் ........
எனை தாங்கும் தூண்களாய் நீயாக  வேண்டும்
என்ற  என் எண்ணம் ஈடேரிற்று என் கால்கள்
துவண்டு நான் சரிந்து போகையில் ..
எனை அணைத்திட்ட உன் கரங்களில் தாயை உணர்ந்தேன் .
என்னை சேயாக்கி ,தாயாகி ,யாதுமாகி நின்றாய் ...
சேமிப்பு கரைந்திட்ட  நொடியில் உன் சிரிப்பில் 
எனை கரையவைத்தாய் உன்னத பிறவியடி நீ ..
கொண்டவனின் நிலை கண்டு ஓடாமல் தனை கண்ட 
அவனின்  நலம் காத்திட்டாய் ...உணர்விழந்த என் கால்களுக்கு 
உணர்வு மீட்கும் போராட்டமும் அரங்கேறிற்றுமீள காத்திருக்கும் 
உன்னை கண்டு என் நெஞ்சு விம்முகிறதடி ஏக்கத்தில் 
இன்று நினைக்கின்றேன் உனக்கான என்னுடைய இன்றைய காத்திருப்பு
அன்று உனக்கும் ஏக்கத்தையே தந்திருக்குமென ...
காத்திருப்பது சுகமே எனினும் தனிமை கொடுமையன்றோ 
உன் வரவுக்காய் காத்திருக்கும் தாயை தேடும் பிள்ளையானேன் 
இன்று உன் கைபிடித்து  வருகையில் உணர்கிறேன்  உன் குழந்தையாக 
இனி நீ இட்டுச்செல்லும் வழிகளை  மட்டுமே என் இதயம் தொடரும் என் அன்பே ....