Author Topic: ~ சிக்கன் செட்டிநாடு, பஞ்சாபி ராஜ்மா, கிச்சன் அனுபவங்கள்! பார்ட்டி ஸ்பெஷல்! ~  (Read 619 times)

Offline MysteRy

சிக்கன் செட்டிநாடு, பஞ்சாபி ராஜ்மா, கிச்சன் அனுபவங்கள்! பார்ட்டி ஸ்பெஷல்!

செஃப் சஞ்ஜீவ் கபூர் கிச்சன் அனுபவங்கள்! பார்ட்டி ஸ்பெஷல்
இந்தியாவின் பிரபல செஃப் சஞ்ஜீவ் கபூர்... டி.வி ஷோக்களில் ரொம்பவே பிரபலம். இந்தியாவின் முன்னணி செஃப்களில் ஒருவர். இவர் தனது அனுபவங்களை, 'அவள் விகடன் கிச்சன்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
''என் அம்மா, நன்றாக சமைப்பார். அப்பாவும் அவ்வப்போது புதிது புதிதாக ஏதாவது சமைப்பார். இவர்கள் இருவரும்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
உணவுகளைச் சமைப்பது, சாப்பிடுவது ஆகியவற்றில் பேஷனாக இருக்க வேண்டும். அதேமாதிரி, மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் நேசிக்க வேண்டும். இவற்றைத்தான் நல்ல செஃப் ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியமான தகுதியா நான் பார்க்கிறேன்.



'நம் வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும், ஒரு செஃப் பதவிக்குத் தேவையான டிகிரியையோ, சமையல் சார்ந்த வேறு படிப்புகளையோ படித்தது கிடையாது. ஆனாலும், அவர்களால் எப்படி அவ்வளவு ருசியாக சமைக்க முடிகிறது’ என்று பல தடவை நினைத்து ஆச்சர்யப்பட்டுப் போவேன். செஃப் பதவியில் இருக்கும் ஒரு நபரின் திறமையைவிட அதிக திறமை நம் இல்லத்தரசிகளிடம் இருக்கிறது. என் அம்மா செய்யும் ராஜ்மா, காதிரோல்ஸ் இவைதான் என்றென்றும் எனக்குப் பிடித்த உணவுகள். சாதம், தயிர், ஏதாவது ஒரு ஊறுகாயுடன் இவற்றைச் சாப்பிடுவதே அலாதிதான்.
இன்று சமையல் உலகில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உலகின் எல்லா பகுதி மக்களின் உணவுகளையும் மக்கள் சுவைக்க ஆசைப்படுகிறார்கள். அவற்றையெல்லாம் வீட்டிலும் செய்து பார்க்கிறார்கள். இது ஒரு புதுச்சுவையை மட்டும் இல்லை, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இந்தியாவில் நிறைய புகழ்பெற்ற திறமையான பெண் செஃப் இருக்கிறார்கள். என் அலுவலகத்தில்கூட ஆண்களை விட பெண் செஃப்கள்தான் அதிகம்! இன்னும் அதிகமான பெண்கள் இதில் வர வேண்டும்'' என்று சொன்ன சஞ்ஜீவ் கபூர், தன் அம்மா செய்யும் பஞ்சாபி ராஜ்மா மற்றும் தன்னுடைய ஸ்பெஷல் டிஷ், சிக்கன் செட்டிநாடு ஆகிய இரண்டு ரெசிப்பிக்களை உங்களுக்காக இங்கே தந்திருக்கிறார்.


Offline MysteRy

சிக்கன் செட்டிநாடு



தேவையானவை :

சிக்கன்  750 கிராம்
எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்
பூண்டு  15 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)
வெங்காயம்  2
டொமேட்டோ ப்யூரி  75 கிராம்
கறிவேப்பிலை   25 கிராம்
செட்டிநாடு மசாலாத்தூள் 150 கிராம்
உப்பு  தேவையான அளவு
முந்திரி பேஸ்ட்  4 டேபிள்ஸ்பூன்
புளி  2 டேபிள்ஸ்பூன்
இடித்த கருப்பு மிளகு   ஒரு டீஸ்பூன்
சர்க்கரை  4 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை 50 கிராம்
துருவிய தேங்காய்  1 டேபிள்ஸ்பூன்

செட்டிநாடு மசாலாத்தூள் தயாரிக்க:

எண்ணெய்   25 மில்லி
சீரகம்  ஒரு டேபிள்ஸ்பூன்
கருப்பு மிளகு  1லு டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா)  1லு டேபிள்ஸ்பூன்
பச்சை ஏலக்காய்  5
இலவங்கப்பட்டை  2
கிராம்பு  3
நட்சத்திர சோம்பு  1
பெருஞ்சீரகம்  ஒரு டேபிள்ஸ்பூன்
கருப்பு ஏலக்காய்  2
கறிவேப்பில்லை  25 கிராம்
காய்ந்த மிளகாய்  5
  மீடியம் சைஸ் வெங்காயம்  2
நறுக்கிய பூண்டு  12 பல்
நறுக்கிய இஞ்சி   ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் ஒரு டீஸ்பூன் (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் செட்டிநாடு மசாலாத்தூள் தயாரிக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி, மசாலாவுக்குத் தேவையானவற்றைப் போட்டு 7 நிமிடம் வதக்கவும். இதை ஆறவைத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, எண்ணெயை வாணலியில் நன்றாக சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். இதில் டொமேட்டோ ப்யூரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் செட்டிநாடு மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இத்துடன் சிக்கன் சேர்த்து  2 முதல் 3 நிமிடம் வேகவிடவும்.
இதில் உப்பு, முந்திரி பேஸ்ட், புளி மற்றும் 150 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி  3 முதல் 4 நிமிடம் வரை வேக விடவும். மிளகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிக்கன் நன்றாக வெந்ததும், கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் போட்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

பஞ்சாபி ராஜ்மா



தேவையானவை :

ராஜ்மா  150 கிராம்
ரைஸ் பிரான் ஆயில்  150 மிலி
பிரியாணி இலை  2
மீடியம் சைஸ் வெங்காயம்  2 (நறுக்கிக்கொள்ளவும்)
நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன்
பூண்டுப்பல்  8  (நறுக்கிக்கொள்ளவும்)
மிளகாய்ப் பொடி  2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன்
சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி  3
உப்பு  தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

குக்கரில் ராஜ்மாவை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். ஆயிலை சூடுபடுத்தி இதில் பிரியாணி இலை , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து மீண்டும் வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்),  மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். இதில் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும்.
இதில் ராஜ்மா, ஆயில் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடம் வரை வேக விடவும். பின், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் மீண்டும் வேக விடவும். கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.