Author Topic: ~ எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள் ~  (Read 804 times)

Online MysteRy

எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்



ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எதனால்? எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை. அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

-ந.சுப்ரமணியன், கரூர்.

இந்த இந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் இந்த இந்த பலன் கிடைக்கும் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. ஞாயிறன்று எண்ணெய்க் குளியலால் இதயதாபம், திங்களன்று கீர்த்தி, செவ்வாயன்று ஆயுள் குறைவு, புதனன்று தன ப்ராப்தி, வியாழனன்று ஏழ்மை, வெள்ளியன்று ஆபத்து, சனியன்று சகலவித சம்பத்துகளையும் பெறுதல் என்பது ஆண்களுக்காக சொல்லப்பட்ட பலன். ஜோதிட சாஸ்திரப்படி திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகள் எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றவை. அதிலும் சனிக்கிழமை மூன்றிலும் உயர்ந்தது. அந்தந்த நாட்களில் அந்தந்த வாராதிபனின் சக்தி மிகுந்திருக்கும்.

சனியின் இயல்பு மந்தகதி. உடலிலுள்ள அசதி, சோர்வு, சோம்பல் முதலிய தமோ குணங்களுக்கு அவர் அதிபன். அவருடைய சக்தி மிகுந்திருக்கக் கூடிய சனிக்கிழமைகளில் உடலில் ஓய்வு தானே ஏற்படும். சுறுசுறுப்பும், விஸ்தரிப்பும் வேண்டிய சுபகாரியங்களை அவனது தினத்திலே வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஓய்வு பெற்றுச் செய்ய வேண்டிய காரியங்களே அவனது தினத்திற்கு ஏற்றதாக அமைகின்றன. ஆகவே சனிக்கிழமையில் எண்ணெய்க் குளியல் ஏற்றதாகிறது.

ஞாயிற்றுக்கிழமையின் அதிபன் சூரியன். ஒளி, உற்சாகம், வளர்ச்சி, விஸ்தரிப்பு, பரபரப்பு, வேகம் இவற்றின் உற்பத்தி ஸ்தானமான ஒரே சக்தி சொரூபன். அவனது தினங்கள் எல்லா ஆக்க வேலைகளுக்கும் ஏற்ற நாட்கள். அன்று எண்ணெய்க் குளியலால் இதயம் தனது இயற்கையான சுறுசுறுப்புள்ள வேகத்தை குறைத்துக் கொண்டு செயற்கையாக மந்தகதியை அடைய நேரிடுகிறது. ஆகவே, தாபம் ஏற்படுகிறது. ஞாயிறன்று ஓய்வு நாளாகக் கொண்டாடாமல் சனியன்றே ஓய்வு நாளாக வைத்துக் கொள்வதுதான் இயற்கைக்கு ஒட்டிய ஆரோக்கிய வழி. ஆகவே நீங்கள் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

ஆணினம் எண்ணெய்க் குளியலால் உணர்ச்சிக் கொந்தளிப்பு தணிந்து தசைகளின் முறுக்குத் தளர்ந்து ஓய்வு பெறுவது போல, பெண்ணினம் எண்ணெய்க்

குளியால் தன் பெண்மையை வளர்த்துக் கொள்கிறது. பெண்மையின் தனிப்பட்ட அம்சங்களான தோலின் மென்மை, மழமழப்பு, கேசங்களின் அடர்த்தி, இடைவிடாது நடைபெறும் மாதவிடாய் சக்கரத்தின் காரணமாக ஏற்படும் உஷ்ண பீடைகளைத் தணிப்பது, உடலில் மினுமினுப்பு இவற்றுக்கு எண்ணெய்க் குளியல் அவசியமாகிறது. ஆகவே இதற்கு சனியை விட சுக்கிரனின் உதவி அதிகம் தேவை. சுக்கிரன் ஸ்திரீகளின் செளமங்கல்யம், செளபாக்கியம், அழகு முதலியவற்றுக்கு அதிபன். செவ்வாயும் பெண் ஜாதகத்தில் விசேஷ சக்தி பெற்றவன். ஆகவே பெண்மையைக் காப்பாற்ற தக்கதொரு கிரஹத்தின் ஆதிபத்யமுள்ள நாட்களில் அதாவது செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்லது.

ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷதைலம், பலாஅஸ்வகந்தாதிதைலம், ப்ரஸாரின்யாதி தைலம், வாதாசினீ தைலம் போன்றவை ஆண்களுக்கு உடலில் தேய்த்துக் குளிப்பதற்கான நல்ல ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகும். பெண்களுக்கு தான்வந்தரம் தைலம், லாக்ஷôதி தைலம், முறிவெண்ணெய், ஸஹசராதி தைலம் போன்றவை உடலுக்கும், கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம், அஸனவில்வாதி தைலம், ஹிமஸாகரதைலம், அஸனமஞ்சிஷ்டாதி தைலம் போன்றவை இருபாலருக்கும் தலையில் தேய்த்துக் குளிக்க உகந்த ஆயுர்வேத மருத்துவ தைலங்கள்.

உடல் வலியைப் போக்கக் கூடிய ஸஹசராதி தைலம், நாராயண தைலம், கற்பூராதி தைலம், வாதமர்த்தனம் குழம்பு, ப்ரபஞ்ஜனவிமர்த்தனம், உடல் சூட்டை தணிக்கக்கூடிய ஹிமஸாஹர தைலம், சந்தனாதி தைலம், அம்ருதாதி தைலம் போன்றவை தலைக்கும், முடி உதிர்தலை தவிர்க்கக் கூடிய நீலிப்ருங்காதி, ப்ருங்காமலகாதி, கைய்யேன்யாதி, குந்தலகாந்தி போன்ற தைலங்களும், நீர்க்கோர்வையைக் குணப்படுத்தக்கூடிய துளஸ்யாதி, பில்வம்பாச்சோத்யாதி, வேணுபத்ராதி, மரிசாதி போன்ற எண்ணற்ற தைலங்கள் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற உபாதைகளைக் குணமாக்கக் கூடிய மூலிகைத் தைலங்களை உடல் மற்றும் தலையில் தேய்த்துக் குளிப்பதால் ஆரோக்கியத்தை மீண்டும் பெறலாம். ஆனால் அதை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி செய்துகொள்வதே நலமாகும்.