« Reply #1 on: May 07, 2015, 02:34:09 PM »
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
உணவில் பெரும்பகுதி பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுதானியங்களாக இருக்கட்டும். உடற்பயிற்சியைத் தினசரி வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் 30 நிமிடங்கள் சீரான, ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்பவரைவிட, உடற்பயிற்சி செய்யாதவருக்கு, நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள ரசாயனங்களின் அளவை சீராக்கி, நன்கு தூங்க உதவும். இவை, இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அவசியமானது.
உயரத்துக்கு ஏற்ற, ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க வேண்டும். அதிக எடை, உடலைப் பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடம் சீரான இடைவெளிகளில் சென்று, பரிசோதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்த வேண்டும்.

தினமும் போதுமான அளவு தூக்கம், மிக அவசியம். தூக்கம் குறையும்போது, அது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, உடலில் வீக்கங்கள் உண்டாவதற்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் பல நோய்களுக்குக் கதவைத் திறந்துவிடும். நாள்பட்ட மன அழுத்தத்தால், ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி செயல்திறனைப் பாதிக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியவில்லை எனில், அதைச் சமாளிக்கப் பழக வேண்டும். அதற்கு நல்ல வழி, உடற்பயிற்சியும் தியானமும்.
« Last Edit: May 07, 2015, 02:35:53 PM by MysteRy »

Logged