சில நாட்கள் நட்பாய் இருந்த
அவளை பல நாட்களுக்கு பிறகு
சந்தித்தேன் ஒரு ரயில் பயணத்தில்......
என்னுடைய வானத்தில்
என்றோ தொலைந்து போன
ஒரு நட்சத்திர பூவொன்று
இன்று ரயிலின் ஜனலோரம்....
என் வாழ்க்கைப் பயணத்தில்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
இறங்கிப் போய்விட்ட
உன் எழில் முகத்தை
என் இதயத்தில் பதிந்துள்ள
உன்னோடு ஒப்பிட்டு பார்கிறேன்....
உதடுகளோடு சேர்ந்து
கண்களும் சிரிக்கும்
அந்த ஊமைச் சிரிப்பு
நீ சந்தோசமாய் இருப்பதை
எனக்கு நிச்சயப்படுத்துகிறது.....
அன்று என்னோடு
நட்பாய் கோத்திருந்த கைகளை
இன்று காதலுடன் கோத்திருக்கும்
உன் கணவனை கண்டு
களிப்படைகிறேன்....
நீ என்னைக்
கவனிக்காது போனாலும்
உன் குஞ்சிக் குழந்தை
என்னை பார்த்து நட்பாய் சிரிக்கிறதே
ஓ.... அது உன் இரத்தம் அல்லவா?.....
தடதடத்து உருண்டோடும்
ரயிலின் சத்தத்தையும் தாண்டி
உன் உதடுகள் அன்று
சொன்ன வார்த்தைகள் என்
காதுக்குள் ஒலித்துக் கொண்டிருகிறது.....
ஜன்னல் காற்று
உன் கூந்தலை கலைத்து
என்னுள் வந்து சங்கமிக்கும் போது
நம் நட்பின்
பழைய வாசனையை சுவாசிக்கிறேன்....
வேகமாக வீசும்
காற்றின் வேகமோ
உன் நட்பின்
நினைவுகைளின் ஆழமோ தெரியவில்லை
என் கண்களில் கொஞ்சம்
கண்ணீர் துளிர் விடுகிறது.....
என் பிரியமான சினேகிதியே
இதோ
ரயில் நிற்கப் போகிறது
நான் இறங்கப் போகிறேன்
நாம் மீண்டும் பிரியப்போகிறோம்
சந்திகாமலே.......
போய் வருகிறேன் ....
என்றாவது ஒரு நாள்
மறுபடியும் சந்திப்போம்
என்ற சந்தோசத்தோடும்
உன் நினைவுகள்
ஏற்றி வைத்த சுமையோடும்
இறங்கப் போன எனக்கு
உன் குழந்தை
சிரித்துக் கொண்டே
பறக்க விட்ட முத்தத்தை
நெஞ்சில் நிரப்பிக் கொண்டு
இறங்கிப் போகிறேன்
ஒரு புது மலர்ச்சியோடு........