Author Topic: ~ 30 வகை வற்றல் - வடாம் - ஊறுகாய் ~  (Read 2571 times)

Offline MysteRy

இடியாப்ப வடாம்



தேவையானவை:
இடியாப்ப மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 4 (விழுதாக அரைக்கவும்),  தண்ணீர் - 3 கப், உப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, இடியாப்ப மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். இட்லிப் பானையில் அடியில் ஒரு கப் நீர் விட்டு, அதன் மேல் இட்லி தட்டு வைத்து, எண்ணெய் தடவி (அ) துணி போட்டு, ஓமப்பொடி அச்சில் வெந்த இடியாப்ப மாவை போட்டு ஒவ்வொரு இட்லி குழியிலும் பிழிந்து மூடி வைத்து, 10-15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, வெயிலில் காயவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய்



தேவையானவை:
நறுக்கிய கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் - தலா கால் கப், நறுக்கிய பாகற்காய் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 15, வினிகர் - கால் கப், கடுகு எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). நறுக்கிய காய்கறிகளுடன் இந்தப் பொடியை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பெரிய பாட்டில் (அ) பாத்திரத்தில் நன்கு குலுக்கி கலந்து கொள்ளவும். பிறகு வினிகரையும், எலுமிச்சைச் சாற்றையும் அதில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கடுகு எண்ணெய் அதன் மீது ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்திருக்கவும் (நடுநடுவே குலுக்கவும்). காய்கறிகள் அந்த கலவையில் நன்கு ஊறிய பிறகு, இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

வடுமாங்காய் ஊறுகாய்



தேவையானவை:
பிஞ்சு மாங்காய் (வடுமாங்காய்) - அரை கிலோ, கடுகுப் பொடி - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 25 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு இதை நல்லெண்ணெயில் புரட்டி... கடுகுப் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். 3 நாட்களிலேயே மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவை அலாதியாக இருக்கும்.
தயிர் சாதம் - மாவடு காம்பினேஷனை அடித்துக்கொள்ள முடியாது. இது, 3 மாதங்கள் கெடாது.

Offline MysteRy

நெல்லிக்காய் ஊறுகாய்



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 15, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நெல்லிக்காயை நன்றாக கழுவி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறவைத்து கொட்டையை நீக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விடாமல் கடுகு (ஒரு டீஸ்பூன் மட்டும்), சீரகம், வெந்தயத்தை வறுத்து பொடி செய்துகொள்ளவும். வெந்த கீற்றாக உள்ள நெல்லிக்காயில் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து கரண்டியால் கிளறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மீதம் உள்ள கடுகை தாளித்து, நெல்லிக்காய் சேர்த்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வறுத்துப் பொடித்த பொடி, மிளகாய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறி, அடுப்பை அணைத்து இறக்கவும்.
இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

கத்திரிக்காய் ஊறுகாய்



தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை
அளவு, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, (சிறிது சிறிதாக கிள்ளிக்கொள்ளவும்), எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை:
கத்திரிக்காயைக் கழுவி, துடைத்து, நீளவாக்கில் வெட்டவும். புளியைக் கெட்டியாக கரைத்து உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி சேர்த்து, கத்திரிக்காயில் ஊற்றிக் கரண்டியால் கிளறவும். ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் இந்தக் கரைசலை வடிகட்டி, காயை வெயிலில் காயவிட்டு எடுக்கவும். சிறிதளவு எண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றிக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை தாளித்து, எண்ணெய் கலந்த கத்திரிக்காயில் சேர்த்தால்... ஊறுகாய் ரெடி! இதை அவ்வப்போது அப்படியே வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.
இந்த ஊறுகாயை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

எலுமிச்சை ஊறுகாய்



தேவையானவை:
எலுமிச்சை பழம் - 15, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எலுமிச்சை பழத்தை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி அதில் பழத்தைப் போடவும். 10 நிமிடம் அப்படியே மூடிவைக்கவும் (பழம் நன்றாக சுடுநீரில் மூழ்கி இருக்க வேண்டும்). உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்துவைக்கவும். பிறகு எலுமிச்சையை நீரில் இருந்து வெளியே எடுத்து கத்தியால் 4 ஆக கீறி, அதனுள் கலந்துவைத்த பொடியை அடைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். அப்படியே ஒரு வாரம் ஊறவிட்டு, பிறகு உபயோகப்படுத்தவும்.

Offline MysteRy

வெங்காய ஊறுகாய்



தேவையானவை:
சின்ன வெங்காயம் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெயில் வதக்கவும். இதனுடன் தனியா, உப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து
வரும்போது அடுப்பை நிறுத்தவும்.
ஊறுகாயை ஆறவிட்டு, பாட்டிலில் போட்டு வைக்கவும். இதை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

பச்சை மிளகாய் ஊறுகாய்



தேவையானவை:
பச்சை மிளகாய் - 100 கிராம், இஞ்சித் துருவல் -  2 டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், கடுகு எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பச்சை மிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, மாங்காய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக கடுகு எண்ணெயை அதன் மீது ஊற்றி குலுக்கிவிடவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்து, சாப்பிடும்முன் பாட்டிலை குலுக்கிவிட்டு பயன்படுத்தவும்.
இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

கிடாரங்காய் ஊறுகாய்



தேவையானவை:
பழுத்த கிடாரங்காய் - 3, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கிடாரங்காயை பொடிப் பொடியாக நறுக்கவும். இதை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு சேர்த்து 7 - 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... ஊறிய கிடாரங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது 2, 3 மாதங்கள் நன்றாக இருக்கும். இனிப்பு சுவை பிடிக்காத வர்கள் வெல்லம் சேர்க்காமலும் செய்யலாம்.

Offline MysteRy

பூண்டு ஊறுகாய்



தேவையானவை:
பூண்டு - ஒரு கப் (உரித்தது), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை பழ அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, தனியா, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
 தனியா, வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி... புளிக் கரைசலை ஊற்றவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, செய்து வைத்திருக்கும் பொடியைத் தூவவும். நன்றாக சுண்டி, எல்லாம் ஒன்றாக கலந்து வந்தவுடன் இறக்கி ஆறவிட்டு, காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.

Offline MysteRy

இஞ்சி இனிப்பு ஊறுகாய்



தேவையானவை:
இஞ்சி - கால் கிலோ, புளி - எலுமிச்சை பழ அளவு உருண்டை, பச்சை மிளகாய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, கீறிய பச்சை மிளகாயைப் போட்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது பொடித்த வெல்
லத்தை சேர்த்துக் கிளறி, ஆறவிட்டு எடுத்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்



தேவையானவை:
தக்காளி - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை -  சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மசித்த தக்காளி, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து நன்றாக வதக்கவும். இக்கலவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொதித்து, சுருள வதங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த தக்காளி ஊறுகாயை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பிரெட்டில்கூட தடவி சாப்பிடலாம்.

Offline MysteRy

கொய்யாக்காய் ஊறுகாய்



தேவையானவை:
கொய்யாக்காய் (பெரியது) - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடுகு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், லெமன் சால்ட் (நாட்டுமருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு.

செய்முறை:
கொய்யாவை வேகவிட்டு, ஈரம் போக துடைத்து... சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கொய்யா துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, லெமன் சால்ட் சேர்த்துக் கலந்து இறக்கினால்... சுவையான, விட்டமின்கள் நிறைந்த கொய்யாக்காய் ஊறுகாய் ரெடி.

Offline MysteRy

மாங்காய் ஊறுகாய்



தேவையானவை:
மாங்காய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... ஓமம், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, மாங்காய் - உப்பு கலவையையும் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்க்கவும். எல்லாம் நன்றாக ஒன்றோடு ஒன்று கலக்குமாறு செய்யவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும். கடுகை தாளித்து இதனுடன் சேர்க்கவும்.

Offline MysteRy

உப்பு நாரத்தங்காய் ஊறுகாய்



தேவையானவை:
நாரத்தங்காய் - 2, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும்.  மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில் காயவிடவும். இப்படியே ஒரு வாரம் வரை காயவிட்டால்...  உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் ரெடி.
இது ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். நாரத்தங்காயை சுருள் சுருளாக நறுக்கியும் இதேபோல் ஊறுகாய் செய்யலாம்.