Author Topic: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~  (Read 818 times)

Offline MysteRy

~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« on: March 18, 2015, 04:32:58 PM »
சிறுதானிய ஸ்நாக்ஸ்!

இன்றைய குழந்தைகள் சாப்பாட்டைவிட ஸ்நாக்ஸைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லை என்று தெரிந்தும், பல பெற்றோரும் காற்று நிரப்பப்பட்ட பாக்கெட் ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலேயே குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில், ஸ்நாக்ஸ் செய்யலாம் என்றால், எப்படிச் செய்வது என்று தெரிவது இல்லை. சிறுதானியத்தை உணவாக மட்டும் இன்றி, ஸ்நாக்ஸாகவும் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் ஆசையும் பூர்த்தி ஆகும். தேவையான ஊட்டச்சத்தும் சேரும். ரா.மாதேஷ்வரன் சிறுதானிய ஸ்நாக்ஸ்களைச் செய்துகாட்ட, அதன் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்தமருத்துவர் பாலசுப்பிரமணியன்.


Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #1 on: March 18, 2015, 04:35:08 PM »
கேழ்வரகு முறுக்கு



தேவையானவை:
கேழ்வரகு மாவு  அரை கிலோ, அரிசி மாவு  50 கிராம், சீரகம்  சிறிதளவு, உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும், கேழ்வரகு மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் கலந்து, தண்ணீர் சேர்த்து, நல்ல பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகப் பிழிய வேண்டும். பிறகு, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அருமையான கேழ்வரகு முறுக்கு தயார்.

பலன்கள்:
உடலுக்கு வலிமை தரும், உஷ்ணத்தைக் குறைக்கும். இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். 

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #2 on: March 18, 2015, 04:36:54 PM »
எள் உருண்டை



தேவையானவை:
எள், நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, பச்சரிசி  50 கிராம்.

செய்முறை:
பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்துக்கொள்ளவும். எள்ளை தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோல் நீங்க லேசாக இடித்து, வெயிலில் சிறிது நேரம் உலரவைக்கவும். பிறகு, பச்சரிசி, வெல்லம், எள் மூன்றையும் ஒன்றாக இடித்த பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும் (உரல் இருந்தால் அதில் போட்டு இடிக்கலாம். சுவை கூடுதலாக இருக்கும்). இந்தக் கலவையை எலுமிச்சம் பழ அளவில் உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

பலன்கள்:
வெல்லம், எள்ளில் இரும்புச் சத்து அதிகம். ரத்த சோகை வராமல் தடுக்கும். இளைத்து இருப்பவர்கள் எள் சாப்பிட்டால், உடல் நலம் நன்றாகத் தேறும். தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #3 on: March 18, 2015, 04:38:27 PM »
கேழ்வரகுத் தட்டுவடை



தேவையானவை:
கேழ்வரகு  அரை கிலோ, வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு  தலா 50 கிராம், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து, ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:
கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள்வைக்கும். குடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #4 on: March 18, 2015, 04:40:23 PM »
கம்பு உருண்டை



தேவையானவை:
நாட்டு கம்பு, நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, வறுத்த வேர்க்கடலை  50 கிராம்.

செய்முறை:
கம்பை நன்றாக இடித்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.  வெல்லத்துடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து, வெல்லப்பாகினை சேர்த்து, எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
வெல்லப்பாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், வெல்லப்பாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. வெல்லப்பாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.

பலன்கள்:
புரதச்சத்து நிறைந்தது. பீட்டாகரோட்டின் அதிகம் உள்ளதால், பார்வைத் திறன் மேம்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.  உடல் சூட்டைத் தணிக்கும். சருமத்தைப் பொலிவாக்கும்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #5 on: March 18, 2015, 04:41:53 PM »
வரகு அரிசி சீவல்



தேவையானவை:
வரகு அரிசி மாவு  ஒரு கிலோ, கடலை மாவு  100 கிராம், உப்பு, மிளகாய்த் தூள்,எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:
வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசையவும். பிறகு, இந்த சீவல் போடும் பெரிய அளவிலான ஓட்டை உடைய கரண்டியில் மாவைவைத்து, கைகளால் தேய்த்துக் காயும் எண்ணெயில் போட்டு, பொன் நிறமாக எடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால், பொரித்த சீவலின் மேல், மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.

பலன்கள்:
கோதுமையைவிட இதில் நார்ச்சத்து அதிகம். தானியங்களுடன் ஒப்பிடுகையில், இது அதிகச் சத்துக்கள் நிறைந்தது. மாவுச்சத்தும் குறைவாகக் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. எளிதில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

Offline MysteRy

Re: ~ சிறுதானிய ஸ்நாக்ஸ்! ~
« Reply #6 on: March 18, 2015, 04:43:34 PM »
வரகு அரிசி அதிரசம்



தேவையானவை:
வரகு அரிசி  ஒரு கிலோ, நாட்டு வெல்லம்  முக்கால் கிலோ, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:
வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடையால் சலித்துக்கொள்ளவும். நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். (வெல்லப்பாகினை பாத்திரத்தில் விட்டால் நகராத அளவுக்கு கெட்டி பதம்). வெல்லப்பாகினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வரகு அரிசி மாவினை சேர்த்துச் சற்று கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். (தட்டி எண்ணெயில் போடும் அளவுக்கு) இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரிக்கவும். அதிரசம் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும்.

பலன்கள்:
எளிதில் செரிமானம் ஆகும். மாவுச்சத்துக் குறைவாக இருப்பதால், அதிக எடை இருப்பவர்களும் சாப்பிடலாம்.