சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?
காலை வேளையில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே டைப் 2 டயபடீஸ் இருந்து, அதை சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு 200ஐத் தாண்டிவிடுகிறது. அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 120தான் இருந்தது. டயட், உடற்பயிற்சி எல்லாவற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறேன். ஒருநாளைக்கு ஒருமுறையாவது நடைப்பயிற்சி செய்கிறேன்… சரியான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன். இருந்தும் சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?
காரணம் சொல்கிறார் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் வி.மோகன்…
காலையில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நீரிழிவு பிரச்னையின் தன்மை, வளர்ச்சிக்கு ஏற்ப இது ஏற்படும். இதைச் சரி செய்ய, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சரியான மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். அரிதாக, சிலருக்கு நடு இரவில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். பிறகு வேகமாக அதிகரித்து காலையில் அதிக அளவாகும்.
அதிகாலை 3 மணிக்கு உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பாருங்கள். அளவு குறைவாக இருந்தால் இரவு நேரத்தில் குறைவான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக இருந்தால், இரவில் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதுவரை நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளாதவராக இருந்தால், அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.