Author Topic: டைரக்டர் ஷங்கர்............என்ன செய்ய போறீங்க சார்?  (Read 5678 times)

Offline Global Angel

டைரக்டர் ஷங்கர்............என்ன செய்ய போறீங்க சார்?



மனதிலே நிரம்பிக்கிடக்கும் கேள்விகளோடு வெறுமனே பயணிப்பதைக் காட்டிலும் கேள்விகளை இறக்கிவைத்தால் ஒன்று நமக்கு விடை கிடைக்கலாம் அல்லது கேள்வி நம்மை விட்டு நீங்கியதே என்ற நிம்மதியில் இருக்கலாம்.. ! இப்படியான மிகைப்பட்டவர்களின் நீண்ட நெடுங்கேள்வியை ஒரு வித அலசலாய் டைரக்டர் ஷங்கரை நோக்கி வைக்கலாம்....




ஜென்டில்மேனில் அறிமுகம், ஆர்ப்பாட்டமாய் கே.டி. குஞ்சுமோனால் வெளிக்கொண்டுவரப்பட்ட ஷங்கர் ஆரம்ப காலத்தில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரிடமும் பின் டைரக்டர் பவித்ரனிடம் பாடம் பயின்றவர். முதல் படத்தில் அசத்தலான கிராபிக்ஸையும் ஏ. ஆர். ரகுமானின் அதிரவைக்கும் அட்டகாச பாடல்களையும், கே.டி. குஞ்சு மோனினி பாக்கெட்டின் பலத்தையும் சரியாக பிரோயோகம் செய்த ஷங்கர்... கதையமைப்பிலும் காட்சிமைப்பிலும் கெட்டிக்காரர்தான். சமகால மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மசாலாக்களை நிரந்து இட்டு சினிமா ரசிகனுக்கு வயிறு புடைக்க விருந்து படைக்கும் ஒர் மிகப்பெரிய யுத்தி தெரிந்த வித்தகர்.




குருவில் கமலஹாசன் செய்ததனை வேறுவிதமாக சொன்ன ஷங்கரின் கதை பலம் என்பது முதல் படத்தில் இருந்து தற்போது வெளியான எந்திரன் வரை வலுவனாது அல்ல என்பது அனைவரும் அறிந்தாலும் அவரின் மற்றைய பூச்சுக்களில் சினிமா ரசிகர்கள் வாய்பிளந்து பார்ப்பதும் பொழுது போக்கில் நிறைவதும் வழமையாகிப் போன நிகழ்வுகள்.




தொழில் நுட்பம் தாண்டி ஷங்கர் கொஞ்சம் கதையில் வலுவாக நின்ற படம் என்று பார்த்தால் முதல்வனையும், இந்தியனையும் சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் இவர் படங்களின் அலைவரிசை என்னவோ ஆழத்தில் உற்று நோக்கினால் சிவாஜி வரை ஒரே வகைதான்.




ஒரு மனிதன், சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயம், அதில் நல்லது செய்ய விதிமுறைகள் தாண்டி அவன் செய்யும் வேலைகள், கடைசியில் சமுதாயம் மாற இப்படி செய்தேன் என்று பஞ்ச் டயலாக்குகளோடு கூடிய ஒரு க்ளைமாக்ஸ். இதைத்தான் ஷங்கர், ஜென்டில்மேன், இந்தியன், அன்னியன், என்று சிவாஜி வரையிலும் செய்திருப்பார்.




முதல்வன் படத்தின் கருவில் இருக்கும் வித்தியாசம் மொத்த சினிமாவையும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து பார்க்க வைத்தது என்பது உண்மையே. அதில் புதுமையிருந்தது. ஆனால் புதுமைகளை விடுத்து ஷ்ங்கர் என்ற பிரமாண்ட டைரக்டராகவே பத்து படங்களையும் (பத்துதானே????) வெளிப்படுத்தி காட்டியிருக்கும் அவர் எதார்த்த சினிமாவை எடுக்கத் தெரியாதவரா? இல்லை எடுத்தால் இப்போது உள்ள காலகட்டத்தில் விலைக்கு போகாது என்று முழுக்க முழுக்க மார்க்கெட்டிங் யுத்தியை போர்த்திக் கொண்டு சிந்திக்கும் கமர்சியல் சார்ந்த ஒரு இயக்குனர் மட்டும்தானா?




தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்பது அந்த அந்த காலக்கட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்று எப்போதும் இருந்து கொண்டுதானிருந்தது. பிரமாண்ட பொருட்செலவில் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு சராசரி போட்டிக்குத்தான் விடப்படும் ஆனால் ஷங்கரின் சமீபத்திய எந்திரன்....அவருக்கும் தயாரிப்பாளருக்கும் லாபத்தை மட்டும் அள்ளிக்கொடுக்கவில்லை.....அதையும் மீறி அங்கே நடந்த மனோதத்துவ வலியுறுத்தல்களும், ஏகாதிபத்திய தாக்குதல்களும்ம் கூடத்தான் வரலாறு காணாதது.




அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட ஷங்கரின் எல்லா படங்களையும் நொறுக்கி அள்ளிய எந்திரனுக்காக செலவழிக்கப்பட்ட மனித மூளைகளின் வியாபார யுத்தி....சர்வநிச்சயமாய் இனி எந்த ஒரு திரைப்படத்திலும் பயன் படுத்தப்படக்கூடாது என்று கோர்ட்டில் கேஸே போடலாம்.....




ஊரில் இருக்கும் அத்தனை திரையரங்குகளையும் மொத்தமாய் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தயாரிப்பாளர்களின் வலு.........




அந்த கட்டத்தில் பார்ப்பதற்கு வேறு படமே இல்லை ... நீங்கள் அனைவரும் எந்திரன் பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாய திணிப்பு நடத்தியது. மீண்டும் மீண்டும் மனித மூளைகளின் உடைகள் உருவப்பட்டு.. திரும்ப திரும்ப ஒரு பிம்பத்தை மூளைகளில் விதைத்து அதை உண்மை என்று நம்ப வைக்கும்.....மனோதத்துவ ரீதியான யுத்தி சாமானிய மக்களுக்குத் தெரியாமலேயே நடந்தது........!




ஒரு கட்டத்தில் எந்திரன் நல்ல படம் இல்லை என்று சொன்னால் எங்கே தமக்கு ரசனைகள் இல்லையோ என்று சக மனிதன் நினைத்து விடுவானோ.. என்று எண்ணி ஆமாம் நன்றாக இருந்தது என்று கூறி அதை ஒரு பேசன் போல உருவாக்கிக் காட்டியது என்று அது எல்லாம் யுத்தியாக இருக்கலாம்.........ஆனால் அவை எல்லாம் தவறான சினிமா எதிர்காலத்துக்கான ஒரு சரியான முன்னுதாரணம் இல்லையா?




இதே நிலை தொடர்ந்தால் சினிமா என்றாலே அதிக பொருட்செலவில் தொழில்நுட்பங்கள் நிறைந்து அதி பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தால்தான் ஓடும் என்ற எண்ணத்தை வரும் காலத்தின் மனதில் மறைமுகமாய் விதைத்திருப்பது வருத்ததுக்குரியது.




கமர்சியல் சினிமாக்கள் எல்லாம் பொருட்செலவு செய்து எடுத்தால் தான் அவற்றின் பிரமாண்டத்தை கணக்கில் கொண்டு ரசிகன் ஏற்றுக் கொள்வான் என்ற மாயையும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மனதில் விதைத்த பெரும் பங்கு டைரக்டர் ஷங்கருக்கு உண்டு.




தேவர்மகன் போன்ற கமர்சியல் படங்களின் ஆழத்தில் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளும், சமூக அவலங்களும் அப்பட்டமாய் வெளிக்கொண்டு வரப்பட்டன. பிரமாண்டமாய் மனித மனதில் சம்மணமிட்டு அமரும் அது போன்ற படங்கள் காலத்தால் அழியாத பிரமாண்டமானவை. இது தான் பிராமாண்டம் என்ற வார்த்தையின் சரியான புரிதல் வடிவம்.




விலையுயர்ந்த இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும், நடிகரும், நடிகையுமின்றி ஒரு வேளை ஷங்கர் படம் இயக்கினால்.....அப்போது தெரியும் எதார்த்தமான ஒரு படைப்பாளியின் வலி. மேலே நாம் கூறிய கூற்றில் ஒன்றான பிரபல நட்சத்திரங்கள் இல்லாத பாய்ஸ் படம் என்ன ஆனது? என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.




இந்த கட்டுரையும் கேள்விகளும் ஏன் டைரக்டர் ஷங்கரை மட்டுமே குறி வைத்துப் பாய்கிறது? மாறாக நடிகனையோ, தயாரிப்பளனையோ ஏன் சாடவில்லை....என்றுதானே கேட்கிறீர்கள்......? காரணமிருக்கிறது....




ஒரு படத்தின் கதையை வலுவானதாக கொண்டிருக்கும் டைரக்டர்க்கு எப்போதும் எக்கச்சக்க முதலும், சூப்பர் ஸ்டார் நடிகர்களும் தேவையில்லை. அங்காடித்தெரு திரைப்படத்தில் என்ன செலவு இருந்தது? எந்த சூப்பர் ஸ்டார் நடித்தார்? அங்கே கதையும் களமும் பேசியது. இது ஒரு உதாரணம்தான்.........ஷங்கர் போன்ற திறமையான டைரக்டர்கள் புது வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் அப்படி உருவாக்குபவை எல்லாம் அவர்களின் வசதிக்காக.....கொஞ்சூண்டு கதை.. நிறைய தொழிநுட்பம், ஆஸ்கார் இசையமைப்பாளர்...+ ஸ்டார் ஹீரோ.....


இதுதானே ஷங்கரின் ஃபார்முலா?




நான் கடவுளிலும், நந்தலாலவும் கூட படைக்கப்பட்டது ஒரு இயக்குனரால்தானே...? ஷங்கர் என்ற ஒரு படைப்பாளிக்கு நிறைய விஷயங்கள் தேவை அப்படி இருந்தால் ஒரு படத்தினை செய்யமுடியும் என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே இதை எப்போது உடைப்பீர்கள் பாஸ்? ஒரு இயக்குனர்தான் ஆணி வேர்.....இயக்குனரின் தீர்மானமின்றி.....தயாரிப்பளர்களும் நடிகர்களும் வந்து விடுவார்களா என்ன? அதனால்தான் இயக்குனரை குறி பார்க்கிறது இந்தக் கட்டுரை.




ஷங்கரின் திரைக்கதையும், மனிதர்களுக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வராத பாணியில் வைக்கும் காட்சி அமைப்புகளும், தொழில் நுட்ப மூளையும் அபாரமானவை.......அதை வைத்துக் கொண்டு எப்போது ஒரு அவள் ஒரு தொடர்கதை, சிந்து பைரவி, புது புது அர்த்தங்கள் , மண் வாசனை, தண்ணீர் தண்ணீர், தேவர் மகன், அழகி, போன்ற படங்களை கொடுக்க போகிறார் ஷங்கர்?


அம்பேத்கார் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் மக்களின் முன்னால் போய்ச் சேரவில்லை. காரணம் வியாபர யுத்திகள் செய்து அதற்காக செலவு செய்து விளம்பரம் செய்ய ஆட்கள் இல்லை....! நல்ல விசயத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் விதைக்க ஆட்கள் இல்லை........மக்களுக்கு அது பற்றிய கவலை இல்லை....!




எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? சினிமா நமது வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றாகிப் போய்விட்டது. சினிமாவை விடுத்து நமது அன்றாடம் நகரவே நகராது என்பதும் அனைவரும் அறிந்தது. அதை சரியாக தரும் டைரக்டர்கள் பொழுது போக்கோடு சேர்ந்து கருத்துக்களையும் சொன்னால் ஒரு 100 வருடங்கள் கழித்தாவது ஏதோ ஒரு மாற்றம் நிகழுமே நமது சமுதாயத்தில்...




அதுவும் டைரக்டர் ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் புதுமுகங்களை வைத்து இயக்கி, செலவுகள் அதிகமில்லாத நல்ல சினிமாக்கள் கொடுத்து....தங்களின் இருப்பையும் படைக்கும் திறனையும் மக்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்.

அப்படியின்று ஷ்ங்கர்கள் ஆயிரம் பிரமாண்டங்கள் எடுக்கலாம்.............ஆனால் அவை வெறும் நிற்காத உயிரற்ற செல்லுலாய்டு............பிம்பங்களாகத்தானிருக்கும்.......
காலம் அவற்றை செரித்துப் போட்டுவிட்டு நகர்ந்து கொண்டுதானிருக்கும்........யாருக்கும் எந்த பயனும் இராது.