Author Topic: ~ ஸ்டீம்-23 அசத்தல் ரெசிப்பிகள்! ~  (Read 1706 times)

Offline MysteRy

பழக்கலவை இலை அடை



தேவையானவை:
கோதுமை மாவு   300 கிராம், தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள். ஆப்பிள், பப்பாளிப் பழம், மாதுளை பழம்  தலா 1, உப்பு, தண்ணீர்  தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும். இதனுடன் வெல்லம்,தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து, இலையில் இருக்கும் சப்பாத்தி மாவில் வைத்து, இலையை இரண்டாக மூடி வேகவைத்து இறக்கவும்.

பலன்கள்:
அனைவரும் சாப்பிட ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் வெல்லம், தேங்காய்த்துருவலைத் தவிர்த்து, பழங்கள் மட்டும் வைத்து சாப்பிடவும். மாலை நேரத்தில் செய்து சாப்பிட ஏற்ற உணவு இது. அனைவருக்கும் நன்றாக எனர்ஜி தரக்கூடிய ரெசிப்பி இது.

Offline MysteRy

கம்புப் புட்டு 



தேவையானவை:
கம்பு ரவை  150 கிராம், தண்ணீர், சீரகத்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், கேரட், கொண்டைக்கடலை  50 கிராம், வெங்காயம்  சிறிதளவு, தக்காளி  2, வறுத்த தேங்காய்த்துருவல்  100 கிராம், மஞ்சள்தூள், மிளகுத்தூள்  தேவையான அளவு

செய்முறை:
கம்பை நன்றாக அரைத்து, உப்பு,தேங்காய் சேர்த்துப் புட்டாகத் தயாரிக்கவும். கடலைக்கறி தயாரிக்க, நன்றாகத் தண்ணீரில் ஊறிய கொண்டைக் கடலையுடன், தக்காளி, தேங்காய் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு இறக்கவும். சூடான  கடலைக் கறியுடன் கம்புப் புட்டு சேர்த்து சாப்பிடவும்.

பலன்கள்:
கம்புப் புட்டு கடலைக் கறியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். தினமும் காலை உணவாக அனைவருமே கம்புப் புட்டு செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

Offline MysteRy

வேகவைத்த காய்கறி   



தேவையானவை:
கேரட்   25 கிராம், பீன்ஸ்   25 கிராம், வெங்காயம்  1, கோஸ்  50 கிராம், காளான்  2, முட்டைகோஸ்  50 கிராம் , மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு

செய்முறை:
அனைத்துக் காய்கறிகளையும் நன்றாக சுத்தமாகக் கழுவி, சற்றே பெரிதான அளவில் வெட்டிக்கொள்ளவும். காய்கறிகளை மிதமான அளவில் ஆவியில் வேகவைத்து இறக்கவும், இதில் உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்:
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ண ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மஞ்சள் காமாலை வந்தவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு. தினமும் காலையிலும் மாலையிலும் இந்த உணவை சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.

Offline MysteRy

நேந்திரம் காய் வித் ஹனி   



தேவையானவை:
நேந்திரம் காய் லேசாகக் கனிந்தது  2, தேன்.

செய்முறை:
நேந்திரம் காயை குக்கரில் வேகவைக்கவும். பிறகு தோலை நீக்கிவிட்டு, நேந்திரம் காயை மிதமான அளவிலான துண்டுகளாக வெட்டவும், அதன் மேல் தேன் ஊற்றி, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து சாப்பிடவும்.

பலன்கள்:
 மாவுச்சத்து நிறைந்த சத்தான உணவு இது. டெசர்ட் வகையிலான இந்த உணவு குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது, உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

பால் கொழுக்கட்டை   



தேவையானவை:
அரிசிமாவு  200 கிராம், தண்ணீர், பனங்கற்கண்டு, ஏலக்காய், சுண்டக்காய்ச்சிய, தண்ணீர் சேர்க்காத பால்  தேவையான அளவு.

செய்முறை:
அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து, சிறுசிறு நெல்லிக்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வேக வைக்கவும். பாலில் பனங்கற்கண்டு சேர்த்து, அதில் ஏலக்காய்த்தூளைத் தூவவும். உருண்டையாகப் பிடித்த அரிசிமாவை, பனங்கற்கண்டு பாலுக்குள் போட்டு ஊறவைத்து சாப்பிடவும்.

பலன்கள்:
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற ஊட்டச்சத்து உணவு. கால்சியம், மாவுச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் என அனைத்து சத்துக்களும் இதில் கிடைக்கிறது. பனங்கற்கண்டு  வறட்டு இருமல், சளி ஆகியவற்றைப் போக்கும். பால் கொழுக்கட்டை என்பதால், குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஹெல்த்தியான ரெசிப்பி. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.

Offline MysteRy

ஸ்வீட் ரோல்     



தேவையானவை:
கோதுமை மாவு  60 கிராம், உப்பு  5 கிராம், தேங்காய்த் துருவல்  சிறிதளவு, பொடியாக அரைத்த ஏலக்காய் சிறிதளவு, வெல்லப்பாகு  20 மிலி, நெய்   சிறிதளவு, சிறிய வட்ட வடிவ வாழை இலை  2, கடலை எண்ணெய், தண்ணீர்  தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவில் எண்ணெய்விட்டு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைத்து, சப்பாத்தியாக சுடவும். தேங்காய்த்துருவல், வெல்லப்பாகு, ஏலக்காய்பொடி, நெய் ஆகியவற்றை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் பூரணமாகத் தயார் செய்யவும். வட்ட வடிவ  வாழை  இலையில் சப்பாத்தியை வைத்து, அதன் மேல்  பூரணத்தைப் பரப்பி,  இலையோடு சேர்த்து பாய் போல் சுற்றவும். பிறகு அதனை இட்லிப் பாத்திரத்தில் சிறிது நேரம் வேகவைக்கவும். பிறகு இலையில் இருந்து ரோலைப் பிரித்து, மூன்று, நான்கு துண்டுகளாக வெட்டி, சூடாகப் பரிமாறவும். வாழை இலையின் வாசனையும் உணவில் கலந்து, சாப்பிட அருமையாக இருக்கும்.

பலன்கள்:
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் காலை 11 மணியளவில் இடைவேளை நேரத்தில் சாப்பிட, ஹெல்த்தியான ரெசிப்பி இது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, மற்றும் உடனடி எனர்ஜி கிடைக்கக்கூடிய அசத்தல் ரெசிப்பி.

Offline MysteRy

காளான் ரோல்     



தேவையானவை:
கோதுமை மாவு   60 கிராம், உப்பு  5 கிராம், நன்றாக நறுக்கிய பச்சை மிளகாய்த்துண்டுகள்  நான்கு, வெங்காயம், காளான்  தேவையான அளவு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சிறிதளவு, சிறிய வட்ட வடிவ வாழை இலை2, கடலை எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு, வெங்காயத்தாள்  சிறிதளவு.

செய்முறை:
கோதுமை மாவில் எண்ணெய் விட்டு, உப்பு சேர்த்து  நன்றாகப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் மாவை ஊறவைத்து, சப்பாத்திகளாக சுடவும். இதற்கிடையே, கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், காளான், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.  கடைசியாக வெங்காயத்தாள் சிறிதளவு சேர்த்துக் கிளறவும். காளான் வெந்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கினால்,  காளான் மசாலா தயார். வாழை இலையில் சப்பாத்தியின்  மேல், காளான் மசாலா பரவலாக வைத்து, இலையோடு சேர்த்து நன்றாக ரோல் போல சுற்றவும். இந்த ரோலை இட்லிப் பாத்திரத்தில் வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இலையை எடுத்துவிட்டுப் பரிமாறவும்.

பலன்கள்:
நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவு இது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிட ஏற்றது. காளானில் இருக்கும் தாது உப்புடன், வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் சப்பாத்தி மேல் இறங்கும் என்பதால், உடலுக்கு கூடுதலாகச் சத்துக்கள் கிடைக்கும்.

Offline MysteRy

காளான் கொழுக்கட்டை   



தேவையானவை:
பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு  200 கிராம், உப்பு, கடலை எண்ணெய், சூடான நீர்  தேவையான அளவு, இஞ்சி  சிறிய துண்டு, பச்சை மிளகாய்  1, காளான்  150 கிராம், வெங்காயம்  50 கிராம், மஞ்சள் தூள், மல்லிப்பொடி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
மாவில் எண்ணெய், உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகப் பதமாகக் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், மல்லிப்பொடி, உப்பு, காளான் சேர்த்து வதக்கி, மசாலாவாக செய்யவும். கொழுக்கட்டைக்குள் காளான் மசாலா வைத்து, குக்கரில் வேகவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

பலன்கள்:
காளான் சேர்ப்பதால், தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து கிடைக்கிறது.  எனவே சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இதய நோயாளிகள் என அனைவருமே சாப்பிட ஏற்றது.

Offline MysteRy

ஸ்வீட் இலை அடை     



தேவையானவை:
கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய், வாழை இலை.

செய்முறை:
 வெல்லம், ஏலக்காய் தேங்காய்த்துருவல் ஆகியவை சேர்த்து, பூரணம் போல செய்துகொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி, பதமாக எடுத்து, வாழை இலையில் கோதுமை மாவை வைத்து, அதன் மேல் ஒரு பகுதியில் மட்டும் பூரணத்தை வைத்து, வட்டவடிவில் உள்ள இலையை அரை வட்ட இலையாக மடிக்கவும். பிறகு இந்த இலையை குக்கரில் வைத்து, வேகவைக்கவும்.இலையில் மாவு ஒட்டாத அளவிற்கு நன்றாக வெந்தவுடன், இலையைப் பிரித்து உள்ளிருக்கும் அடையை சாப்பிடவும்.

பலன்கள்:
 இது மிகவும் எனர்ஜி தரக்கூடிய உணவு. வாழை இலையில் இருக்கும் சத்துக்கள் உள்ளே இருக்கும் அடையில் இறங்கிவிடுவதால், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து மிகுந்த இந்த உணவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.