நண்பர்களே, இந்த அதிசயத்தைக் கேளுங்கள்! மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள லேக் ஹில்லியர் என்ற ஏரியின் நிறம் என்ன தெரியுமா? அந்த ஏரி முழுவதும் பிங்க் நிறத்தில் உள்ளது! இது செயற்கையாக செய்யப்பட்டது அல்ல, இயற்கையாகவே பிங்க் நிறத்தில் தான் உள்ளது. இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நம் ஊர்களில் எல்லாம் இப்படி நிறத்தில் ஒரு ஏரி கூட இருப்பதைப் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் இந்த ஏரி எந்தக் காலநிலையிலும் தனது பிங்க் நிறத்தில் இருந்து மாறுவதில்லை. அவ்வளவு ஏன், இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினால் கூட தனது நிறத்தினை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாய் இருக்கிறது.
இந்தப் பிங்க் நிறத்தினால் இந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கூட இந்த ஏரியினைப் பார்க்க இயலும். இதன் நிறத்திற்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படாவிட்டாலும், இது போல் வேறு நிறங்களில் இருக்கும் ஒரு சில நீர்நிலைகள் அதிலிருக்கும் பாக்டீரியாக்களினால் அந்த நிறத்தினை பெற்றிருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீருக்கு நிறமே கிடையாது என்று அறிந்திருப்போம், ஆனால் ஒரு ஏரி முழுவதும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே?