இன்று ஒருவரின் கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் (kidney) போன்ற ஏதாவது ஒரு உடல் உறுப்புப் பாதிக்கப் பட்டால், வேறு வழியே இல்லை, வேறு யாராவது ஒருவர் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து தான் உயிர் தப்ப முடியும். ஆனால் நவீன எதிர்காலத்தில் இதே போன்று ஒரு உடல் உறுப்பு தேவைப் படும் நிலையில், கணினியில் அச்சுப்பொறி (printer) ஊடாக ஏதாவது ஒரு புகைப்படத்தை அச்சு அடிப்பது போல், டாக்டர்கள் அந்தத் தேவைப் படும் உறுப்பை அதற்கென்றே அமைக்கப்பட்ட உடல் உறுப்பு அச்சுப்பொறியில் அச்சு அடித்து விடுவார்கள். இவ்வாறான அச்சுப்பொறி இன்னும் ஒரு 10 வருடங்களில் வந்துவிடும் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.
சரி, 10 வருடங்களில் உடல் உறுப்புகளை அச்சு அடித்து உயிர்களைக் காப்பாற்றலாம் என்பதை ஒரு பக்கத்தில் விடுவோம். ஆனால் இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், உடல் உறுப்புகளை அச்சு அடிக்கும் எதிர்கால உலகத்திற்கு, ஒரு முழு மனிதனை அச்சு அடிக்க எவ்வளவு நேரம் எடுக்கப் போகின்றது? ஒரு முழு உறுப்பை அச்சு அடிக்க வாய்ப்பு இருக்கும் போது, அடுத்ததாக ஒரு முழு மனிதனை அச்சு அடிக்க இயலாது என்று கூறமுடியாது!