நான் மிகவும் வியந்த விடயம் ஒன்று என்ன தெரியுமா? அண்மையில் சீன நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், மனிதனின் சிறுநீரிலிருந்து சாதாரண அணுக்களை உற்பத்தி செய்து, அவைகளைக் கொண்டு நரம்பணுக்களை உருவாக்கும் அதிநவீன முறையைக் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத் துறையில் நரம்புச்சிதைவு நோய்களைக் குணப்படுத்த இம்முறை பேருதவியாக அமையும்! பொதுவாகப் புதிய அணுக்களைக் கரு ஸ்டெம் செல்லைக் கொண்டு தான் உற்பத்தி செய்ய முடியும். இப்படியாகக் கையாளப்படும் முறையோடு இந்தப் புதிய முறையை ஒப்பிடும்போது, இப்புதிய முறை பல கோணங்களில் சிறந்தது என அறிய வந்துள்ளது. முதலாவதாக, கரு ஸ்டெம் முறையில் எலும்பு மச்சை (bone marrow) கொண்டு தான் அணுக்களை உற்பத்திச் செய்ய முடியும். எனவே, இந்த முறையைக் கொண்டு அதிகளவில் அணுக்களை உற்பத்திச் செய்ய இயலாது. மேலும், குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இம்முறையைக் கையாண்டு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும். இதை விட, இம்முறையில் உற்பத்திச் செய்யப்படும் அணுக்களை மனிதனுக்குள் புகுத்தப்பட்ட சில காலத்தில், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது. இம்மாதிரியான குறைகளைத் தீர்க்கும் வகையில் இந்த அதிநவீன முறை அமைகின்றது. சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரிலிருந்து புது அணுக்களை உற்பத்திச் செய்யும் முறை மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தை கொடுப்பதாக அமைகின்றது!