உலகின் பல நாடுகளில் தற்போதைய பெரும் பிரச்சனைகளில் ஒன்று பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆகும். இதுவே, ஒரே ஒரு தடவை மட்டும் நாம் செலவு செய்துவிட்டு, நமது வாழ்நாள் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டியதே இல்லையென்றால், அது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே! இந்தக் கற்பனையை நனவாக்கியுள்ளது “லேசர் பவர் சிஸ்டம்ஸ்” நிறுவனம். இந்த நிறுவனம் தோரியம் எனும் கதிரியக்கப் பொருள் மூலம் சக்தி வழங்கப்படும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்திற்கு நூறு வருடங்களுக்கு எரிபொருளே தேவையில்லையாம். கேட்கவே ஆச்சரியமாக இல்லையா?
தோரியம் மற்றும் லேசரின் துணைகொண்டு நீரை வெப்பப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் நீராவியினால் காரினை இயக்குகின்றனர். ஒரு சிறிய அளவுள்ள தோரியத்திலிருந்து கிடைக்கும் சக்தி, அதே அளவுள்ள நிலக்கரியிலிருந்து கிடைக்கும் சக்தியைவிட 20 மில்லியன் மடங்குகள் அதிகம். இதனால் தான், வெறும் எட்டு கிராம் கொண்ட தோரியத்திலிருந்து, நூறு வருடங்கள் வரை இயங்கும் காரினை உருவாக்கியுள்ளனர்.
இதை விட, இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவென்ஸ் கூறிய விடயம் தான் மிகவும் ஆச்சரியமானது! அவர் சொல்கிறார், ஒரு ஏர் கண்டிஷனிங்க் பகுதியளவுள்ள தோரியத்தின் சக்தியளிக்கும் இயந்திரத்தின் மூலம் ஒரு சிறிய நகரத்தில் உள்ள பல கட்டடங்களுக்குச் சக்தியை வழங்க முடியும் என்று. தகுந்த பாதுகாப்பின் மூலம் இதன் கதிரியக்கத்தினைக் கட்டுப்படுத்த இயலும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
எப்படியிருந்தாலும் ஒருபுறம் ஆக்கம் ஏற்பட்டால் மறுபுறம் அழிவு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆபத்தில்லாமல் அறிவியல் இருப்பது என்பது சற்றுக் கடினம் தான். இநதக் கண்டுபிடிப்பில் கூட என்ன ஆபத்து இருக்கின்றது என்பதை எதிர்காலம் தான் நமக்குக் காட்டபோகிறது. இருந்தாலும், இந்தக் கண்டுபிடிப்பூடாக நமது உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கின்றது.