ஒரு நாளுக்கு நமக்கு 40 நிமிடங்ககளுக்கு கண்கள் தெரிவதில்லை என்று நான் உங்களிடம் கூறினால், அதை நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை! இதற்கு நமக்கு கண்கள் தெரியவில்லை என்று ஒன்றும் அர்த்தம் இல்லை, நண்பர்களே! சரி, நான் என்ன சொல்லவருகிறேன் என்பதைத் தொடர்ந்து படித்துப் பாருங்கள்!
நமது கண்கள் மூளைக்குத் தற்போதைய நிகழ்வுகளைப் படமாகக் காட்டும், ஆனால் மூளை அவற்றினைத் தடுப்பதற்கே முயற்சி செய்யும். நமது கண்கள் அசையும் போது கண்ணின் ரெட்டினாவில் இருந்து வெளிவரும் தடுமாறும் படங்களை மூளை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நேர இடைவெளியில் அதாவது நமது கண்கள் அசையும் அந்த கால இடைவெளியினை பூர்த்தி செய்வதற்காக, ஒரு வினாடிக்கும் குறைவான காலகட்டத்தில் மூளை ஒரு மாயத்தோற்றத்தினை ஏற்படுத்தும். இதற்கு “Saccadic masking” என்று பெயர். இதன் மூலம் நமது கண்கள் ஒரு மங்கலான படத்தினைப் பார்ப்பது போல் தோன்றும்.
இந்த மங்கலான படத்திற்குப் பிறகு நாம் காணும் காட்சி எதையாவது ஒன்றை உற்றுநோக்கியது போல் இருக்கும், அதற்குக் காரணம் கண்கள் சிறிது நேரத்திற்கு அதே காட்சியினைக் கொண்டிருப்பதே ஆகும். இதற்கு “stopped-clock illusion“ என்று பெயர். அதாவது ஒரு கடிகாரத்தில் இரண்டாவது நொடியாக மாறிய பிறகும் கூட நமது கண்கள் முதல் நொடியினைக் காட்டும் என்பதே இதன் பொருள். இதனால் தான் நாம் தினமும் 40 நிமிடங்கள் கண் தெரிந்தும், தெரியாமலே இருக்கிறோம்.