பல்லியின் வால் வெட்டப்பட்டு விட்டால் அது தானாகவே வளர்ந்துவிடும். இது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இந்த வால் மீண்டும் உருவாகுவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மனித இனத்திற்கும் உதவும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆம், இழந்த உறுப்புக்களை மீண்டும் பெறுவதற்கான செயல்முறையில் தான் அவை உதவுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் பச்சை நிற ‘அனோல்’ எனப்படும் பல்லியின் அறுபட்ட வாலிலுள்ள ஏறக்குறைய 23,000 ஜீன்களை ஆராய்ந்தனர். அதில் குறிப்பிடத்தக்க 326 ஜீன்கள் மறு உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிப்பதைக் கண்டறிந்தனர்.
இது பற்றி அரிசோனா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த வாழ்க்கை அறிவியலின் பேராசிரியரான டாக்டர். கென்ட்ரோ குசுமி கூறுவது “நாங்கள் வாலின் நுனிப்பகுதியில் மறு உருவாக்கத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் மறுவளர்ச்சியடையும் செல்கள் தசைகள், குருத்தெலும்பு, முதுகுத்தண்டு மற்றும் தோல் என அனைத்துப் பகுதியிலும் தென்பட்டது” என்பது தான்.
வாலின் இது போன்ற மறு உருவாக்கத்திற்கு 60 நாட்களுக்கு மேல் ஆகுமாம். அப்படியானால் மனிதனின் உறுப்புகளுக்கு எத்தனை நாள் ஆகும்? அவற்றை எப்படி துரிதப்படுத்துவது? இந்தக் கேள்விகளுடன் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் பிறக்கும்போதே உள்ள குறைபாடுகள், மூட்டுப் பிரச்சினைகள் என உறுப்பு சம்பந்தமான பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். ஏறக்குறைய அனைத்து 326 ஜீன்களுமே மனித உடலுடன் பொருந்தியுள்ளதாக கென்ட்ரோ தெரிவித்துள்ளார்.
நண்பர்களே, எதிர் காலத்தில் விஞ்ஞானத்தின் உதவியுடன் நாம் இழந்த உறுப்புகளைக் கூடப் புதுப்பிக்கலாம் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இல்லையா?