Author Topic: ~ 30 வகை பத்திய சமையல்! ~  (Read 1782 times)

Offline MysteRy

~ 30 வகை பத்திய சமையல்! ~
« on: November 22, 2014, 01:22:21 PM »




"உலகத்திலேயே மிகச்சிறிய, மிகவும் பயனுள்ள பார்மஸி எது தெரியுமா? நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டிதான். குறிப்பாக, மழைக்காலத்தில் நம்மைப் பாடாய்ப்படுத்தும் ஜலதோஷம், இருமல், ஜுரம், உடல்வலி போன்ற பல்வேறு சங்கடங்களுக்கு... மிளகு, சீரகம், சுக்கு, தனியா போன்றவற்றின் மூலம் நிவாரணம் கிடைப்பதோடு, வரும் முன் காக்கவும் செய்யலாம்" என்று கூறுகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. அஞ்சறைப்பெட்டி பொருட்களுடன் வேப்பம்பூ, பூண்டு, இஞ்சி, வெற்றிலை, காய்கறி போன்றவற்றையும் பயன்படுத்தி, மழை  குளிர் சீஸனில் ஏற்படும் உடல் அசௌகரியங்களைத் தவிர்க்க உதவுவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கைகொடுக்கும் '30 வகை பத்திய சமையல்’ ரெசிப்பிக்களை இங்கே வழங்கியிருக்கும் பத்மா,
''இந்த ரெசிப்பிக்கள் நாவுக்கு ருசியாக இப்பதோடு... மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடத் தூண்டும் என்பது கூடுதல் சிறப்பு' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #1 on: November 22, 2014, 01:24:48 PM »
இஞ்சி  பச்சை மிளகாய் தொக்கு



தேவையானவை:
இளம் இஞ்சி  25 கிராம், பிஞ்சு பச்சை மிளகாய்  10, புளி  ஒரு சிறிய  நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம்  ஒன்று, எண்ணெய்  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி... புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #2 on: November 22, 2014, 01:26:56 PM »
கறிவேப்பிலை  மிளகு குழம்பு



தேவையானவை:
கறிவேப்பிலை  2 கைப்பிடி அளவு, மிளகு   20, உளுத்தம்பருப்பு  2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, புளி  ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு  ஒரு டீஸ்பூன், எண்ணெய்  4 டீஸ்பூன்,  உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து... புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #3 on: November 22, 2014, 01:28:40 PM »
கீரை பொரித்த குழம்பு



தேவையானவை:
முளைக்கீரை  ஒரு சிறிய கட்டு, மிளகு  6, தனியா  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  ஒன்று, தேங்காய்த் துருவல்  ஒரு சிறிய கிண்ணம், சீரகம்  ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு  4 டீஸ்பூன்,  கடுகு  அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. 

செய்முறை:
கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பருப்பும் கீரையும் வெந்த பிறகு உப்பு சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:
 சூடான சாதத்துடன் இதை சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட்டால், சுவையில் அசத்தும். இதற்கு, மாங்காய்ப் பச்சடி சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #4 on: November 22, 2014, 01:30:24 PM »
தத்துவப் பச்சடி



தேவையானவை:
வேப்பம்பூ  ஒரு கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் (சற்றே பெரியது)  இரண்டு, வெல்லம்  50 கிராம், பச்சை மிளகாய் (சிறியது)  ஒன்று, கடுகு  அரை டீஸ்பூன், எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. 

செய்முறை:
 மாங்காய்த் துண்டுகளை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும். வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்துவிடவும். பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
'வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #5 on: November 22, 2014, 01:32:05 PM »
கண்டதிப்பிலி ரசம்



தேவையானவை:
கண்டதிப்பிலி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  10 கிராம், மிளகு, தனியா, கடுகு, கடலைப்பருப்பு   தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  ஒன்று, புளி  சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கண்டதிப்பிலி, மிளகு,  காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, நீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்கவைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து... கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு:
இந்த ரசம், உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பருப்புத் துவையல் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #6 on: November 22, 2014, 01:33:42 PM »
மணத்தக்காளி வற்றல் குழம்பு



தேவையானவை:
உப்பில் ஊறவைத்து, காயவைத்த மணத்தக்காளி வற்றல்  25 கிராம், காய்ந்த மிளகாய்   2, புளி  ஒரு எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி  4 டீஸ்பூன், வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு  தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய்  4 டீஸ்பூன், உப்பு  சிறிதளவு. 

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்... அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத் தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை  ஆறவைக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #7 on: November 22, 2014, 01:35:21 PM »
பூண்டு  மிளகு  சீரக ரசம்



தேவையானவை:
பூண்டு  6 பல் (தோல் உரித்தது), புளி  ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு   தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, நெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு. 

செய்முறை:
பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். புளியை நீரில் கரைத்து, அதில் அரைத்ததை சேர்த்துக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்து குழைவாக வேகவைத்து, இந்த ரசத்தை ஊற்றிக் கரைத்து குடித்தால்... உடல் வலி, சோர்வு நீங்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #8 on: November 22, 2014, 01:37:09 PM »
இஞ்சி  பிரண்டை துவையல்



தேவையானவை:
இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள்  ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி  ஒரு சிறிய துண்டு, புளி  ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு  4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, கறிவேப்பிலை  ஒரு கைப்பிடி அளவு,  நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை  நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:
பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்... அசத்தல் சுவையில்  இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #9 on: November 22, 2014, 01:39:16 PM »
பூண்டு  வடகம் குழம்பு



தேவையானவை:
பூண்டு  100 கிராம், கூட்டு வடகம்  100 கிராம், சின்ன வெங்காயம்  20, வெந்தயம், கடுகு  தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  4, சாம்பார் பொடி  4 டேபிள்ஸ்பூன், புளி  ஒரு எலுமிச்சம்பழ அளவு, நல்லெண்ணெய்  50 மில்லி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கூட்டு வடகம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி... இதனுடன் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்பு:
இதயத்தைக் காக்கும் சிறந்த மருத்துவக் குணம் பூண்டுக்கு உண்டு. இதயக் கோளாறு உள்ளவர்கள், அடிக்கடி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #10 on: November 22, 2014, 01:40:57 PM »
பூண்டுப்பொடி



தேவையானவை:
உளுத்தம்பருப்பு  4 டீஸ்பூன், பூண்டு  100 கிராம் (தோல் உரிக்கவும்), காய்ந்த மிளகாய்  6, எண்ணெய்  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (ரொம்ப மசியக்கூடாது).

குறிப்பு:
இந்த பூண்டுப் பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் ஏற்றது. பூண்டு, இதயக் கோளாறு வராமல் தடுப்பதுடன், வாயுத் தொல்லையையும் நீக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #11 on: November 22, 2014, 01:42:31 PM »
அப்பளக் குழம்பு



தேவையானவை:
புளி  பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டு பல்  10, சின்ன வெங்காயம்  10, உளுந்து அப்பளம்  2, காய்ந்த மிளகாய்  ஒன்று, சாம்பார் பொடி  2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம்  தலா கால் ஸ்பூன், நல்லெண்ணெய்  6 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய்  தாளித்து... வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும். பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #12 on: November 22, 2014, 01:44:23 PM »
வல்லாரைத் துவையல்



தேவையானவை:
வல்லாரைக்கீரை  ஒரு கட்டு, தேங்காய்த் துருவல்  4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, புளி  சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
காய்ந்த மிள காய், உளுத்தம்பருப்பை சிறி  தளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் வல்லாரைக் கீரையை வதக்கிக்கொள்ளவும்.இவை ஆறியவுடன் தேங்காய்த் துரு வல், புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு:
வல்லாரைக்கீரை, ஞாபகசக்திக்கு  மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #13 on: November 22, 2014, 01:45:57 PM »
மூலிகைப்பொடி



தேவையானவை:
சுக்கு  ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல்  10, வேப்பம்பூ, கறிவேப்பிலை  தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு  2 டீஸ்பூன், கடுகு  2 டீஸ்பூன்,  பெருங்காயம்  ஒரு சிறிய துண்டு, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில்  வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். 

செய்முறை:
இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு  சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு  ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ  பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை  இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு  ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம்  வாயுத்தொல்லை நீக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #14 on: November 22, 2014, 01:47:59 PM »
வேப்பம்பூ சாதம்



தேவையானவை:
அரிசி  200 கிராம், வேப்பம்பூ  ஒரு கைப்பிடி அளவு, மோர் மிளகாய்  4, கடுகு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  இரண்டு டீஸ்பூன், நெய்  சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு... வேப்பம்பூவையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு சாதம் வைத்து, அதில் வறுத்த வேப்பம்பூ கலவை, உப்பு சேர்த்து, நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால்.. நாவுக்கு ருசியாக இருக்கும்.

குறிப்பு:
வேப்பம்பூ... பித்தம், தலைசுற்றல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ சீஸனில் அதை சேகரித்து, காயவைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.