Author Topic: ~ கண்ணே அதிரசம் பண்ண ஆசையா! ~  (Read 387 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கண்ணே அதிரசம் பண்ண ஆசையா!

''வீடே மணமணக்க அதிரசம் சுட்டு, சட்டியில இருந்து எடுக்கும்போதே ஒண்ணு, ரெண்டை கிண்ணத்துல வெச்சு வீட்டுல இருக்குறவுகளுக்கு சூடா கொடுத்துட்டு, அப்புறம் சுட்ட அதிரசத்தை எல்லாம் அண்டாவுல, கூடையில அடுக்கி, தீபாவளி அன்னிக்கு அக்கம்பக்கத்துக்கு கொடுத்துனு... அதிரசம் செய்றதே எங்களுக்கெல்லாம் தீபாவளிதானப்பு!'' என்று சொல்லும் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த கலைச்செல்வி ரமேஷ், தான் தயாரிக்கும் அதிரசங்களை வணிக ரீதியில் பல ஊர்களுக்கும் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்.

'ம்க்கும், நமக்கெல்லாம் வீட்டுக்கு அதிரசம் செய்யுறதுக்கே திணற வேண்டியிருக்கு. பத்து வருஷமா மெனக்கெட்டாலும், இந்த அதிரசம் பதம் மட்டும் பிடிபடவே மாட்டேங்குது' என்கிறீர்களா? கவலையை விடுங்கள்... கலைச்செல்வயின் கைப்பக்குவத்தைக் கவனியுங்கள்.



தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு அதிரசம் செய்ய):

பச்சரிசி - 750 கிராம், வெல்லம் - 500 கிராம், தண்ணீர் - 100 - 150 மில்லி, ஏலக்காய், சுக்கு, நெய் - சிறிதளவு, கடலை எண்ணெய் (அல்லது) ரீஃபைண்டு ஆயில் - ஒரு லிட்டர். (1 படி அல்லது ஒன்றரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ வெல்லம், 200 முதல் 250 மில்லி தண்ணீர் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்ளவும்)
.
பச்சரிசியை அலசி 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து, பின்னர் அரிசியில் ஈரப்பதம் இல்லாதவாறு பருத்தித் துணியில் கொட்டி உலர்த்தவும்.

 நன்கு உலர்த்திய அரிசியை ரைஸ் மில்லில் கொடுத்து அதிரசத்துக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லி, அரைத்து வாங்கவும். அல்லது, வீட்டு உரல்/மிக்ஸி மூலமாக அரிசியில் 75% மாவாகவும், 25% குருணையாகவும் இருக்கும்படி இடித்துக்கொள்ளவும்.

 அதிரசம் தயாரிப்பதில் முக்கியமான வேலை, பாகு காய்ச்சுவது. வெல்லத்தை நன்றாக இடித்து, சட்டியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, காய்ச்சவும். அடிபிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கம்பி பதம் வந்தவுடன் நிறுத்தவும் (பாகைக் காய்ச்சி, ஒரு துளியை தண்ணீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் விழும்படி செய்தால், இலகுவாகவும் இல்லாமல், கெட்டியாக இல்லாமல் கம்பி போல நீண்டு விழுந்தால் கம்பி பாகு பதம்).

பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்க்கவும் (விருப்பத்துக்கு ஏற்ப).

 காய்ச்சிய பாகு இளஞ்சூட்டில் இருக்கும்போது, இடித்து வைத்திருக்கும் அரிசி மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும். கலக்கும்போது கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.



இந்தப் பாகு, அரிசி மாவுக் கலவையை 7 - 8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். இரண்டு நாட்கள் வரைகூட இது கெடாமல் இருக்கும்.

 தயாரித்து வைத்திருக்கும் மாவு இறுகியிருக்கும் என்பதால், அதிரசம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கைகளால் கலந்துகொண்டால், அதிரசம் செய்ய எளிமையாக இருக்கும். கூடவே, லேசாக மாவையும் தூவிக் கலப்பது நல்லது.

 இப்படிச் செய்யும்போது, கை படுவதாலும், தண்ணீர் சேர்ப்பதாலும் இந்த மாவை அன்றைக்கே அதிரசம் செய்யப் பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால் மாவு அதிகமாகப் புளித்து வீணாகிவிடும்.

 மாவை சிறிது எடுத்து உருட்டி, தட்டி, சட்டியில் நன்றாகக் காய்ந்த கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயிலில் விடவும். அப்படித் தட்டும்போது, நெய்/எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது கனமான பிளாஸ்டிக் கவரில் (ரீஃபைண்டு ஆயில் கவரை கட் செய்து, அதன் உட்புறம்) வைத்துத் தட்டினால், ஒட்டிக்கொள்ளாமல் வரும். வெந்த பதம் பார்த்து அதிரசத்தை எடுக்கவும்.

 சுட்ட அதிரசங்களை எண்ணெய் வடியவிட்டு, பாத்திரத்தில் வைக்கவும்.

 இவ்வாறு செய்யப்படும் அதிரசம் ஒரு வாரம் வரை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்!