Author Topic: நாங்கள் தனியாகத் தானா இருக்கின்றோம்  (Read 672 times)

Offline Little Heart

நாங்கள் தனியாகத் தானா இருக்கின்றோம்? வீட்டில் தனியாக இருப்பதைக் கேட்கவில்லை, இந்தப் பிரபஞ்சத்தில் தனியாகத் தானா இருக்கின்றோம்? நம்மைத் தவிர்த்து வேறு ஒரு கோளில் வேற்றுலக உயிரி (alien, extraterrestrial life) இருக்கின்றதா? இந்தக் கேள்விக்கு என்னால் நிச்சயமாக ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறவே முடியாது! ஏன், இந்த உலகில் யாருமே நிச்சயமாக பதில் கூறமாட்டார்கள், ஏனென்றால் அதற்கு பதில் யாருக்கும் தெரியாது! ஆனால், ஒன்று மட்டும் இலகுவாகப் பண்ணலாம்: விண்வெளியில் எங்கேயாவது வேற்றுலக உயிரிகள் வாழ்கின்றன என்பதின் வாய்ப்பு கணித நிகழ்தகவு (probability) படி கணித்து விடலாம். அதை இந்த அறிவு டோஸ் உடாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில் வேற்றுலக உயிரி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். வேற்றுலக உயிரி என்றவுடன் எல்லோரும் ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் E.T. போன்ற உருவங்களைத் தான் நினைப்பார்கள். ஆனால், இவ்வாறான பெரும் உருவங்கள் மட்டும் அதில் அடங்குவதில்லை. வேற்றுலக பாக்டீரியா போன்ற உயிரிகள் கூட ஓர் உயுரினம் என்று தான் எடுக்கப்படும்.

சரி, அவ்வாறான வேற்றுலக உயிரி, விண்வெளியில் ஏதாவது ஒரு கோளில் (planet) தான் வாழமுடியும் என்று எடுத்துக் கொள்வோம். நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் இருக்கும் சூரியன் என்னும் நட்சத்திரத்தை 8 கோள்கள் சுற்றிவருகின்றன. இதே போன்று பெரும்பாலான வேறு நட்சத்திரங்களையும் கண்டிப்பாக பல கோள்கள் சுற்றிவருகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள். எனவே, வேற்றுலக உயிரிகள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று கண்டுபிடிக்க, முதலில் விண்வெளியில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதை அறியவேண்டும்.

விஞ்ஞானம் நம்புவது இது தான்: குறைந்தபட்சம் 100.000.000.000 நட்சத்திரங்கள் புவியில் இருந்து பார்க்கும் போது காணப்படுகின்றன, ஆனால் அவர்களின் கணிப்புப் படி இந்த எண் இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது தான். இருந்தாலும் நாம் இந்த எண்ணையே எடுத்துக்கொள்வோம். இதில் பிரம்மாண்டமான விடயம் என்ன தெரியுமா…? இந்த 100.000.000.000 நட்சத்திரங்கள் பால் வழி (milky way) எனப்படும் விண்மீன் பேரடையில் (galaxy) மட்டுமே இருக்கின்றன! ஆனால், பிரபஞ்சத்தில் இப்படி எத்தனையோ விண்மீன் பேரடைகள் காணப்டுகின்றது.

எனவே, அடுத்ததாக விண்வெளியில் எத்தனை விண்மீன் பேரடைகள் இருக்கின்றன என்பதை அறியவேண்டும். இது கூட 100.000.000.000கும் அதிகமாகத் தான் இருக்கும் என்று கணிக்கப்படுகின்றது! அப்படி என்றால் நமது பிரபஞ்சத்தில் குறைந்தபட்சமாக 100.000.000.000 x 100.000.000.000 = 10.000.000.000.000.000.000.000 நட்சத்திரங்கள் உள்ளன! அப்படி என்றால் 10 கோடி கோடி கோடி நட்சத்திரங்கள்! என்ன, இதைப் படிக்கத் தலை சுற்றுகின்றதா…? இன்னும் இருக்கு…

சரி, அடுத்ததாக இவ்வளவு நட்சத்திரங்களிலும் எத்தனை நட்சத்திரங்கள் நமது சூரிய குடும்பம் போல் கோள்களைக் கொண்டன என்பதைப் பார்ப்போம். இதிலும் கூட ஓர் குறைந்தபட்சமான எண்ணிக்கையை எடுத்து விடுவோம். 1.000.000 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் மாத்திரமே கோள்கள் கொண்ட நட்சத்திரம் என்றும், அந்த ஒரு நட்சத்திரத்தை ஒரே ஒரு கோள் மட்டுமே சுற்றிவருகின்றது என்றும் எண்ணுவோம். அப்படி என்றால் நமது விண்வெளியில் 10.000.000.000.000.000 கோள்கள் உள்ளன!!!

இனி இந்த 100 கோடி கோடி கோள்களில் எத்தனை கோள்களில் உயிர் இருக்கலாம் என்று சும்மா ஒரு மதிப்பீடு போடலாம். 1.000.000 கோள்களில் ஒரு கோளில் மட்டும் தான் உயிர் உருவாகுவதற்கும், வாழ்வதற்கும் சூழல் படைக்கப்பட்டு இருக்கின்றது என்று எடுத்துகொண்டால், நமது பிரபஞ்சத்தில் 10.000.000.000 கோள்களில் உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று இலகுவான கணித முறையில் கூறிவிடலாம்!

நான் ஆரம்பத்தில் கூறியது போல், இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் தான்! விண்மீன் பேரடையின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு பேரடையில் காணப்படும் நட்சத்திரத்தின் எண்ணிக்கையும் உண்மையில் இன்னும் எவ்வளவோ மடங்கு அதிகமானது என்பதை விஞ்ஞானம் சொல்கிறது.

விண்வெளியில் Aliens உள்ளன என்ற நம்பிக்கை எனக்கு 100% இருக்கின்றது! ஆனால் ஒன்று: வேற்றுலக உயிரிகளை தேடும் நம்மை, எத்தனை வேற்றுலக உயிரிகள் ஏற்கனவே கண்டு பிடித்து விட்டு, தற்போது நமது புவியை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றார்களோ யாருக்குத் தெரியும்…? வந்தால் என்ன செய்றது… தமிழர்களின் பண்பாட்டின் படி டீ, காப்பி கொடுத்து விருந்தோம்பல் செய்து அனுப்பி விடுவோம். என்ன சொல்றீங்க…?

சரி, இனி உங்கள் கருத்தைக் கூறுங்கள், நண்பர்களே! விண்வெளியில் நம்மைத் தவிர வேறு உயிரினங்கள் உள்ளனவா…? இல்லை, மனிதனைப் போல் ஓர் அதிசயம் வேறு எங்கேயும் கிடைக்காதா?