Author Topic: நட்சத்திரங்கள் மினுங்குவதற்குக் காரணம் என்ன?  (Read 622 times)

Offline Little Heart

நமது கண்ணுக்குச் சாதாரணமாகத் தெரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் திடீரென மினுங்குவது போல் தோன்றுவதை நீங்கள் அனைவருமே கண்டிருப்பீர்கள், சரி தானே? அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே? இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, நமது பூமியில் இருக்கும் காற்று தான். ஆம், நாம் வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்கள் மினுங்குவது போல் அழகாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவை மினுங்குவதில்லை! நாம் வானத்தைப் பார்ப்பதற்குத் தடையாக உள்ள காற்றினால் மினுங்குவது போல் தோன்றுகிறது. காற்று மண்டலத்திலுள்ள வாயுக்களின் கலவை, வெப்பநிலை, நீராவி அளவு, மற்றும் பல்வேறு அடுக்குகள் கொண்ட காற்று மண்டலத்தின் அடர்த்தி  போன்ற பல காரணிகளைக் கொண்டு மினுங்குவது போல் தெரிகிறது. நட்சத்திரத்திலிருந்து வருகின்ற ஒளி நமது காற்று மண்டலத்தின் வழியே தான் நம் கண்களை வந்தடைய வேண்டும், காற்றிலுள்ள பல மாறுபட்ட காரணிகளால் அந்த ஒளி விலகல் அடைந்து மினுங்குவது போல் தெரிகிறது.

தொலைநோக்கி மூலம் இரவில் பார்த்தால் கூட நட்சத்திரங்கள் பளபளவென தோன்றும் அல்லது ஒரு சில வேளைகளில் அசைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும். இது அந்த இடத்திலுள்ள காற்றின் ஒழுங்கற்ற நிலையினால் ஏற்படுகிறது. ஆனால், இதுவே கோடைக்கால இரவுகளில் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்தக் காலநிலையில் காற்று நிலையான தோற்றத்துடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.