நண்பர்களே, விண்வெளியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அதில் பெரும்பாலானவை புரியாத புதிர்களாகவே உள்ளன. அந்த வகையில் தான் இந்த அறிவு டோஸில் நான் தரும் விடயமும் கூட அமைந்துள்ளது. ஆகஸ்ட் 14, 1977 ல் பிக் இயர் ரேடியோ டெலெஸ்கோப் எனும் கருவியின் ஊடாக ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ ஸ்டேட் பல்கலைக் கழகம் 1420 மெகாஹெர்ட்ஸ் அளவுடைய ஒரு வித்தியாசமான சிக்னலை விண்வெளியில் இருந்து பெற்றது. 72 வினாடிகள் நீடித்த இந்த சிக்னல் தனுசு (Sagittarius constellation) விண்மீன் கூட்டத்தின் திசையிலிருந்து வந்துள்ளது. விண்வெளியிலுள்ள வித்தியாசமான பின்புற சத்தங்களுக்கு அப்பாலும் இந்த ஒலியால் வர முடிந்ததற்கு இதன் அதிக அளவு ஆற்றலே காரணமாக இருந்தது.
இந்தத் திசையில் அருகில் உள்ள நட்சத்திரம் 220 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதனால் இந்த சிக்னல் விண்வெளியின் வெற்றிடப் பகுதியில் இருந்து தொடங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிக்னல் பதிவு செய்யப்பட்ட போது அங்கு பணிபுரிந்த டாக்டர். ஜெர்ரி ஆர். எஹ்மன், இந்த சிக்னல் முடிவுகளைப் பார்த்து ஆச்சரியமடைந்து எழுதியது “Wow!” என்பது தான். அதனால் இது “வாவ் சிக்னல்” என்ற பெயராகவே மாறிவிட்டது. அதன்பின்பு பலமுறை தேடியும் இது போன்ற எந்தவிதமான சிக்னலும் கிடைக்கவேயில்லை.
என்ன நண்பர்களே, ஒருவேளை உண்மையிலே ஏலியன் எனப்படும் வேற்றுலக உயிரினங்களிடம் இருந்து இந்த சிக்னல் வந்திருக்குமோ?