2009ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் முதல் தலைமுறை நட்சத்திரங்களைப் பற்றிய சிக்னல்களைத் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குக் கிடைத்த ரேடியோ சிக்னல் அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதற்குக் காரணம், அந்தச் சத்தம் வழக்கமான சத்தத்தை விட அதிகமான பலத்துடன் இருந்தது. இதனை “விண்வெளிக் கர்ஜனை” என அழைக்கின்றனர். பிரபஞ்சத்தின் மற்ற அதிகபட்ச ரேடியோ சிக்னல்களை விட, இது ஆறு மடங்கு பெரியதாகவும், வலுவாகவும் இருந்தது.
ஆனால் இதில் எந்தச் செய்திக் குறிப்பும் இல்லை. சாதாரணமாக ஒரு இசை அல்லது சத்தத்தினைக் கேட்டால் எப்படி இருக்குமோ, அது போலத்தான் இதுவும் உள்ளது. இதைக் கண்டறிந்தவர்கள், இந்தச் சத்தத்தினைப் பூம் (பலமான சத்தம்) அல்லது ஹிஸ் (சீறும் சத்தம்) என்று ஒலியாக இதனைப் பெயர்க்கும்போது கூறுகின்றனர்.
முதல் தலைமுறை நட்சத்திரங்களைப் பற்றிக் கண்டறிய நினைத்ததை, இது வேறு திசைக்கு மாற்றிவிட்டது. இந்தப் பெரிய சத்தத்தினால் பிற சிறிய சத்தங்களைக் கேட்க முடியாமல் போய்விட்டது. அதாவது நமது காதருகில் ஒருவர் ஹார்ன் அடிக்கும் போது இன்னொருவர் கிசுகிசுத்துக் கொண்டிருந்தால் அந்தச் சத்தம் எப்படிக் கேட்கும், அது போன்று தான் இதுவும் இருந்துள்ளது.
விண்வெளியைப் பற்றிய பல புதிர்கள் இன்றுவரை கண்டறியப்படாமல் உள்ளது நண்பர்களே, அதில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. சரி, போகப் போக வேறு என்னவெல்லாம் கண்டறியப்போகின்றார்களோ தெரியவில்லை, பார்ப்போம்…