நான் அறிவியலைக் காதலிக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான், காதலின் அறிவியல் பற்றி ஒரு அறிவு டோஸ் எழுதாமல் இருக்க முடியாது தானே?
காதல் என்கிற அந்த உணர்வு எங்கே நடைபெறுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? பலர் சொல்வார்கள் காதல் இருதயத்தில் தான் உருவாகின்றது என்று, ஆனால் உண்மை அது அல்ல! காதல் மூளைக்குள் தான் உருவாகி நடைபெறுகிறது. இதில் என்ன அதிசயம் என்றால், காதலிப்பவர்களின் மூளை கோக்கைன் (cocaine) எனப்படும் போதை மருந்து எடுப்பவர்களின் மூளை போல் ஒத்திருக்கும். கோக்கைன் பாவிப்பதால் மூளையில் இருக்கும் மகிழ்ச்சி மையம் (pleasure center) செயல்படுத்தப்பட்டு இதன் விளைவாக எப்போதுமே மிக இலகுவாக ஒரு மகிழ்ச்சி நிலையை அடைந்துவிடலாம். இதே போன்று தான் காதலிப்பவர்களும் தமது காதலன்/காதலியை காதலிப்பது மட்டும் இல்லாமல், தமது சூழலையும் மகிழ்ச்சியுடன் ஒரு விதமான romantic பார்வையிலே பார்ப்பார்கள்.
இதில் இன்னும் ஒரு சிறப்பும் இருக்கிறது! காதலிக்கும் போது பயம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்வுகள் குறைந்து, கவலைகள் அனைத்தும் பறந்தே போய்விடுகின்றது! இப்படிப்பட்ட இந்த மகிழ்ச்சி மையத்தை உதாரணத்திற்கு கல்வி கற்கும் போது தூண்டினால், நாம் படிப்பதைக்கூட மிகவும் சுலபமாகச் செய்துவிடுவோம்!
சரி, காதல் என்கிற உணர்வு மூளைக்குள் நடைபெறுகின்றது என்று முதல் கூறியிருந்தேன். அப்படியென்றால் இந்த உணர்வுக்கு ஏதாவது வேதியியல் பொருள்கள் தானே காரணமாக இருக்க வேண்டும்? நிச்சயமாக! Dopamine, Norepinephrine, Oxytocin என்று அழைக்கப்படும் வேதியியல் பொருள்கள் தான் நாம் காதலிக்கும் அந்த நபரை மேலும் மேலும் விரும்புவதற்கு ஊக்கத்தையும் ஏக்கத்தையும் தருகின்றன. இது போதாது என்று தீவிர சக்தி, அக்கறை மற்றும் நன்னிலை உணர்வுகளையும் கொடுக்கின்றன.
என்ன தான் காதலின் அறிவியலை ஆராய்ந்தாலும், காதல் ஓர் கண் இல்லா மர்மம் தான்! உண்மை சொல்லப்போனால் ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை காதலின் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், இப்படிப் புரியாத இந்தக் காதல் நமக்குள் மலரும் போது நாம் காதலிக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்துவிடுகிறது!
ஆக மொத்தத்தில் காதல் ஒரு போதை மாதிரி! சிம்பிள் ஆகக் கூறப்போனால், காதலிப்பதை நாம் காதலிக்கின்றோம் (we love being in love). ஆஹா… என்னாலேயே தாங்க முடியலடா சாமி!