உங்களில் பலர் நிச்சயமாகப் பந்து போன்ற வடிவம் கொண்ட தர்பூசணியைச் (watermelon) சாப்பிட்டிருப்பீர்கள், சரி தானே? ஆனால் இதே தர்பூசணியை சதுர வடிவில் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஜப்பான் தான், நண்பர்களே! அது எப்படி அங்கு மட்டும் சதுர வடிவில் தர்பூசணி உள்ளது என்று சிந்திக்கின்றீர்களா? அதற்குக் காரணம் அவர்கள் தர்பூசணியினை சதுர வடிவ கண்ணாடியினுள் வளர்க்கின்றனர். இப்படி சதுர வடிவில் இருந்தால் தான் அவற்றை எளிதாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முடியுமாம்.
சதுர வடிவிலான இந்த வகைத் தர்பூசணிப் பழங்களுக்கு விலையும் அதிகம் தான். சாதாரண தர்பூசணி 15-20$ என்றால் இந்த சதுர தர்பூசணி 82$ அளவிற்கு விற்பனையாகிறது. குளிர்பதனப் பெட்டியினுள் வைப்பதற்காக, பிரத்யேகமாகவே இதுபோன்ற தர்பூசணி வளர்க்கப்படுகிறது. ஆனால் இவை அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமடையவில்லை.
நமக்குத் தகுந்தவாறு இயற்கையினை வளைத்துக்கொள்ளும் வழக்கம் வளர்ந்துகொண்டே செல்வதற்கு இதுவே ஒரு சான்று. இது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!