Author Topic: என் நினைவில் அவள்  (Read 500 times)

Offline thamilan

என் நினைவில் அவள்
« on: September 29, 2014, 04:56:13 PM »
சாம்பல் இரவு
சோம்பல் நிலவு

பவள மல்லிச்செடி
நிலவின் காதில் ஏதோ
மெல்லப்  புலம்பிக் கொண்டிருந்ததது
தன் நறுமணத்தை பரப்பிக் கொண்டு ...

காற்று நின்று
ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததது

மல்லிகையின் வாசத்தில்
கிரங்கிப் போன இரவு
இழுத்துப் போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கியது

உறங்கிக் கொண்டிருந்த நான்
அவள் நினைவு தட்டி எழுப்ப
போர்வையை உதறிக் கொண்டு
தூக்கம் களைந்து எழுந்தேன்

அவள் நினைவு
குளிர் நிலவிலும் தணலாக
என்னை சுட்டது

கரைந்தாலும் ஊதுபத்தி யின் மணம்
காற்றில் கலந்திருப்பது போல
பிரிந்தாலும் அவள் நினைவு
மனதில் ஒட்டி இருந்தது

என் துயர் காண சகிக்காத
காற்று சற்றென்று
இடம் பெயர்ந்து ஓடியது
மேகம் உருவி விழி துடைத்துக் கொண்டது

நானும் துக்கத்தால்
ஒரு சிகரட்டை பற்றவைத்தேன்!