நெருப்பின் அருகே நமது விரலைக் கொண்டு சென்றால், நம்மால் அவ்வெப்பத்தை உணர முடிகின்றது, இதுவே அந்த நெருப்பில் இருந்து நமது விரலை கொஞ்சம் கொஞ்சமாக விலத்தும் போது, அந்த வெப்பம் குறைந்துகொண்டு போகின்றது. இது இலகுவான இயற்பியல் ரீதியான லாஜிக். ஆனால், ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா? சூரியனும் ஒரு விதமான பெரும் நெருப்புத் தானே? நாம் மலைப்பிரதேசத்தில், அதாவது சூரியனுக்குக் கொஞ்சம் அண்மையில் இருக்கும் போது, நமக்குக் குளிராக இருக்கும், ஆனால் மலைப்பிரதேசத்தை விட்டுக் கீழ் நோக்கி செல்லும்போது, அதாவது சூரியனை விட்டு விலகும் போது, வெப்பம் அதிகரிக்கின்றதே, அது மட்டும் எப்படி? முதல் குறித்த உதாரணம் போல், நாம் மலைப் பிரதேசத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும் போது குளிர் அதிகரிக்கத் தானே வேண்டும்?
இதற்குக் காரணத்தை நான் அறியத்தர முன்பு, வெப்பநிலை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நம்மை சுற்றி இருக்கும் காற்று, எண்ணற்ற துகள்களைக் கொண்டது. இந்தத் துகள்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று உரசி, மோதி செயல்பாடு நடைபெறுவதால் தான் வெப்பம் ஏற்படுகின்றது. எனவே, இந்தத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் வேகம் அதிகரிக்கும் போது வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், காற்றின் அழுத்தத்தைப் பொறுத்து இந்தத் துகள்களின் வேகம் அதிகரிக்கின்றது. அழுத்தம் கூடினால், துகள்களின் வேகமும் அதிகரித்து, அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. காற்றின் அழுத்தம் குறையும் போது, துகள்களின் வேகம் குறைந்து வெப்பநிலையும் குறைகின்றது.
இது எல்லாம் இப்போ புரிந்த உங்களுக்கு, இனி ஏன் மலைப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கின்றது என்பது நன்றாகவே புரியும். அதற்குக் காரணம் நாம் மலை ஒன்றில் ஏறி மேலே செல்லச் செல்ல காற்றின் அழுத்தமும் குறைந்துகொண்டே போகின்றது. ஆகவே வெப்பநிலையும் குறைந்துகொண்டே போகும். இதுவே நாம் மலையில் இருந்து கீழே செல்லும் போது மறுபடியும் காற்றின் அழுத்தம் அதிகரித்து அத்துடன் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. எனவே மலை பிரதேசத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கு சூரியன் காரணம் அல்ல, அங்கே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கின்றது.
என்ன நண்பர்களே, புரிந்து விட்டதா?