புகைபிடிக்கும் பழக்கம் ஒரு சராசரி மனிதனின் ஆயுளைக் குறைக்கின்றது! இவ்விடயம் உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை மட்டும் அல்லாமல், இது மேலும் பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, புகைபிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், புகைபிடிப்பவர்கள் இப்பழக்கத்தைத் தாமதமாகக் கைவிட்டாலும் கூட, அவர்கள் தங்களின் ஆயுளை நீடிக்க இயலும் என்பதே தான். ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான், ஃப்ரான்ஸ், ஸ்பெயின், மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட புகைபிடிப்பவர்கள், 3 முதல் 50 ஆண்டுகள் வரைக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் அறுபது வயதைத் தாண்டி புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களின் ஆயுள் காலம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. புகைபிடிப்பவர்கள் பலர் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” என்பது போல், இவ்வளவு காலம் புகைத்த நாம் இனி இதனைக் கைவிட்டால் ஒரு பலனும் கிடையாது என்கிற கருத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்தக் கருத்தே தவறானது என்பதை விளக்க இந்த ஆய்வின் முடிவுகள் உதவுகின்றன.
எனவே நண்பர்களே, புகைபிடிப்பதைக் கை விடுவதற்கு நேர காலம் ஒன்றுமே இல்லை! நீங்கள் புகைக்கும் பழக்கத்தைக் இன்று கூட கைவிட்டாலும், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது நிச்சயம்!