ஒரு சராசரி வாளியினுள் எவ்வளவு தண்ணீர் இருக்கக்கூடும் நண்பர்களே? என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து லிட்டர் இருக்கும், சரி தானே? இதுவே நமது பிரம்மாண்டமான புவியில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பூமியில் நீர் நிறையவே இருக்கின்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம், ஆனால் இந்த நீர்ப் பொருள் 1,260,000,000,000,000,000,000 லிட்டர் அளவு என்பது பலருக்குத் தெரியாத ஒரு விடயம் ஆகும். இதில் என்ன விசேஷம் என்றால், இந்தத் தண்ணீர் ஒரு இடையறாத சுழற்சியைக் கொண்டுள்ளது. அது, கடலில் இருந்து ஆவியாகிக் காற்று மூலம் பயணித்து, நிலத்தில் மழையாக இறங்கி, பின்னர் மீண்டும் கடலில் பாய்கிறது.
நமது உலகின் சுமார் 70 சதவீதமான நிலப் பரப்பு கடல்கள் மற்றும் சமுத்திரங்களால் ஆனது. மற்றும் கடலின் சராசரி ஆழம் பல ஆயிரம் அடி ஆகும். பூமியில் உள்ள தண்ணீரில் 98 சதவீதம் சமுத்திரங்களில் உள்ளது; அதன் உப்புத் தன்மை காரணமாகவே அதைக் குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. இரண்டு சதவீதத் தண்ணீர் குடிநீராக உள்ளது, ஆனால், இந்த 2 சதவீதத்தில் 1.6 சதவீதம், துருவ கட்டிகள் மற்றும் பணிப்பாறையில் உறைந்து கிடக்கிறது. 0.36 சதவீதம் நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீராக இருக்கிறது. புவியில் இருக்கும் மொத்த நீரில், 0.036 சதவீதம் மட்டுமே ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படுகிறது.
மீதியுள்ள நீர், மேகங்கள் மற்றும் நீராவியாகக் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. மேலும், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் இருக்கிறது. ஏன், உங்கள் உடல் கூட 65 சதவீதம் நீரால் தான் ஆனது, நண்பர்களே. நீர் இல்லாமல் நமது புவியில் உயிரே தோன்றியிருக்காது என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை ஆகும்!