நண்பர்களே, இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம்? அதற்குக் காரணம் தெரியுமா? சும்மா டைம் பாசுக்கு வீசுகின்றோம் என்று எல்லாம் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஓர் மிக முக்கியமான காரணம் இருக்கிறது, அது என்னவென்று இந்த அறிவு டோஸில் அறியத்தருகின்றேன்.
விஞ்ஞானிகள் நடாத்திய ஆய்வு ஒன்று, கைகளை வீசி நடப்பது, நடைப் பயணத்தை எளிய செயலாக மாற்றுகிறது எனக் கூறுகிறது. அந்த ஆய்வில் நடத்தப்பட்ட பரிசோதனைகளால், கைகளை வீசாமல் நடப்பது உங்கள் நடைப் பயணத்தை 12 % கடினமாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இதை வேறு விதமாகக் கூறினால், நீங்கள் கைகளை வீசாமல் நடப்பது, உங்கள் வழக்கமான நடை வேகத்தை விட 20 சதவீதம் குறைவான வேகத்தில் நடப்பதற்கு அல்லது 10 கிலோ சுமையுடன் நடப்பதற்குச் சமமாகும்.
அது ஏன் இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பொன்னான நேரத்தை இந்த ஆராய்ச்சியில் செலவு செய்தார்கள் என நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை, இந்த ஆராய்ச்சி சிறப்பாக நடக்கும் ரோபோக்களை (robots) உருவாக்கவும், முடக்குவாத சிகிச்சைக்கும் உதவும் என நம்பப் படுகின்றது.
சும்மா கைகளை வீசி நடப்பதில் இவ்வளவு இருக்கா?