ஒரு தாய் வயிற்றில்
பிறந்து
ஒன்றாக வளர்ந்த அந்த
இனிய நாட்கள்
இனி வருமா
சிறுவர்களாக இருந்தபோது
அம்மா எல்லோரும்
ஒன்றாக இருக்கவைத்து
சோறு ஊட்டும் போது
எனக்கு முதல் உனக்கு முதல்
என நாம் போட்ட
சின்னச் சின்ன சண்டைகள் .........
கோழியின் சிறகுக்குள்
சுகம் காணும் குஞ்சிகள் போல
அம்மாவின் அரவணைப்பில்
ஒருவர் மேல் ஒருவர் கால் போட்டு
தூங்கிய இரவுகள்
இனி வருமா ............
இளம் வயதில்
நல்ல சகோதரர்களாக
நல்ல நண்பர்களாக
இன்ப துன்பங்களை
ஒளிவு மறைவின்றி
மனம் திறந்து பேசிப் பழகிய அந்த
இனிய நாட்கள்
இனி வருமா.........
ஒருவர் சட்டையை
மற்றவர் உடுத்தினோம்
ஒற்றை தட்டில்
ஒன்றாக சாப்பிட்டோம்
இனி வருமா அந்த
இனிய நாட்கள்...............
இன்று
வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு
நமக்கென வேறு உறவுகள்
வந்த பிறகு
அந்த பழைய நெருக்கம்
பறிபோய் விட்டதே இன்று
நம் கூடப் பிறந்தவர்கள் கூட
நம் தூரத்து சொந்தங்கள் ஆகி விட்டனரே
நாம் தொலைத்த அந்த
இனிய நினைவுகள் பல அதில்
நம் சகோதர நெருக்கமும் ஒன்று