Author Topic: ~ சுவையான சிறுதானிய ரெசிப்பி! ~  (Read 425 times)

Offline MysteRy

சுவையான சிறுதானிய ரெசிப்பி!

சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், திருச்சியில் சென்ற மாதம் எட்டு நாட்களுக்குப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.

ஒவ்வொரு நாளும் குதிரைவாலி பிரியாணி, ராகி அடை, ராகி பர்கர், சிறுதானிய அடை, ராகி பீட்சா, சிறுதானிய கட்லெட், சாமை சாம்பார் சாதம், வரகு தயிர் சாதம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விதமாக, சிறுதானிய உணவுகளை சுவையாக சமைத்து அசத்தியிருந்தனர் சமையல் வல்லுநர்கள். திருவிழாவில் செய்து காட்டிய சில சிறுதானிய உணவுகளின் ரெசிப்பிகள் இங்கே...




குதிரைவாலி பிரியாணி



தேவையானவை:

குதிரைவாலி அரிசி  4 கப், பீன்ஸ், கேரட்  300 கிராம், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி  தலா 100 கிராம், பூண்டு  5 பல், இஞ்சி  ஒரு துண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்  சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, நெய், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃப்ளவர், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
 குக்கரில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை சேர்த்து, பிறகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து காய்கறிகளைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதில், அரிசியைக் கொட்டி கிளறி ஏழரை கப் தண்ணீர் சேர்த்து கொத்த மல்லி, புதினா சேர்த்து கிளறி குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.
பலன்கள்: குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். இது மலச் சிக்கலைத் தடுத்து, கொழுப்பைக் குறைக்கும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

Offline MysteRy

சாமை சாம்பார் சாதம்



தேவையானவை:

சாமை அரிசி  4 கப், பீன்ஸ், காரட்  250 கிராம், கத்திரிக்காய், தக்காளி  தலா 50 கிராம், காய்ந்த மிளகாய்  8, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு  தலா ஒரு கப், சின்ன வெங்காயம்  10, முருங்கைக்காய்  2, உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  தேவையான அளவு, சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய்  சிறிதளவு.

செய்முறை:

சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர்  சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:  சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.

Offline MysteRy

சிறுதானிய கார அடை



தேவையானவை:

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு  கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி  கால் கிலோ, முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை  4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி,  அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும். 

பலன்கள்:

குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

Offline MysteRy

வரகு தயிர் சாதம்



தேவையானவை:

வரகு அரிசி, தயிர்  தலா 4 கப், பால்  100 மி.லி, பெருங்காயத்தூள்  ஒரு டீஸ்பூன், துருவிய கேரட்  ஒரு கப், பச்சை மிளகாய்  7, கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

வரகு அரிசியைக் கழுவி வேகவைக் கவும். சாதம் சூடாக இருக்கும்போது, தயிர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும். இதில், நறுக்கிய மிளகாய் வதக்கி, துருவிய கேரட் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:

நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் ஃபோலிக் ஆசிட், கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் சீரான எடையைக் குறைப்பதற்கும், மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தாக இருக்கும்.